ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கடந்த ஒருவார காலமாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாது வீடுகளில் குவிந்து இருப்பதுடன் மக்கள் வீதிகளிலும் குப்பைகளைக் கொட்டுவதால் அவை வீதிகளில் தேங்கிடந்து மக்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. எனினும் கொழும்பில் உள்ள குப்பைகளை புத்தளத்தின் அருவாக்காட்டுக் கொண்டு செல்லும் பணிகள் கடந்த சில தினங்களாக மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கொழும்பின் பல இடங்களில் குப்பைகள் தேங்கிடப்பதை அவதானிக்க முடிகின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக மக்கள் விஷனம் தெரிவித்ததைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ஐ.எம்.இக்பாலிடம் வினவியபோது அவர் இன்னும் ஒருசில தினங்களில் முழுமையாக குப்பைகள் அகற்றப்பட்டு விடும் எனவும் குப்பை அகற்றல் நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நாளாந்தக் குப்பைகளை வீதியோரங்களில் போடுவதால் அகற்றும் பணிகளில் சுத்திகரிப்பாளர்கள் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் பிரதி மேயர் தெரிவித்தார்.
ஓவ்வொரு நாளும் புத்தளம் அருவாக்காட்டிற்கு சுமார் 20 தொடக்கம் 25 லொறிகளில் குப்பைகளை அனுப்புவதாகவும், கொண்டு செல்லும் இடம் தூரம் என்பதால் போக்குவரத்துக் கஷ்டமும் நேர தாமதமும் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர் 80 சதவீதமான குப்பைகளை அகற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை இன்று அல்லது நாளையுடன் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாகவும் பொதுமக்கள் குப்பைகளை வீதிகளில் கொட்டுவதைத் தவிர்த்து கொழும்பு மாநகர சபைக்கு ஒத்துழைப்பைத் தருமாறும் பிரதி மேயர் கேட்டுக் கொள்வதுடன் கொழும்பு மாநகர சபை முழுமையாக குப்பைகளை அகற்றி நல்ல நிலைமைகளைக் கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.