ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பிரதமரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. தொடர்ந்தும் பிரதமர் முயற்சிப்பாரா? என்பது தெரியவில்லை. இப்பிரேரணைக்கு பிரதானமாக எதிர்ப்புத் தெரிவித்தவர்களுள் முஸ்லிம் கட்சித்தலைவர்களும் அடங்குகின்றனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜனாதிபதிப் பதவி சாதகமானது; என்கின்ற ஒரு நம்பிக்கை இருந்துவருகிறது. மறுபுறம் இன்னுமொரு சிறுபான்மையான தமிழர்களின் பிரதான கட்சி த தே கூ ஜனாதிபதி முறைமை ஒழிப்பை ஆதரிக்கின்றது.
சிறுபான்மைகள் இந்நாட்டில் ஆட்சியாளர்களாக வரமுடியாது. அவர்களின் அரசியல் கொள்கைகளின் அச்சாணி ஆட்சியாளர்களைக்கொண்டு தமது விடயங்களைச் சாதித்துக் கொள்வது. “சாதிப்பது” என்பது “பேரம்பேசும் சக்தி”யில் தங்கியிருக்கின்றது.
ஜனாதிபதி ஆட்சிமுறையில் பேரம்பேசும் சக்தி அதிகமென முஸ்லிம்கள் நம்பும்போது பிரதமர் ஆட்சியிலேயே அச்சக்தி அதிகமென தமிழ்த்தரப்பு நம்புகிறார்கள்; இல்லையெனில் அதனை அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
நமது நிலைப்பாடு சரியா? அவர்களது நிலைப்பாடு சரியா? உண்மையிலேயே ஜனாதிபதி ஆட்சிமுறை நமக்கு சாதகமானதுதானா? அவ்வாறாயின் எந்தவகையில்? வெறுமனே பேரம்பேசும் சக்தி எனக்கூறினால் போதுமா? அந்தப்பேரம்பேசும் சக்தி நிரூபிக்கப்பட்டிருக்கின்றதா?இவையெல்லாம் நாம் அறிவுபூர்வமாக எழுப்பவேண்டிய கேள்விகள்.
பேரம்பேசும் சக்தி நிரூபணம்
————————————-
1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த தலைவர் 12 1/2% வெட்டிப்புள்ளித் திட்டத்தை 5% வீதமாக குறைத்ததன்மூலம் அதனை நிரூபித்தார். அன்று அது செய்யப்படாமல் இருந்திருந்தால் இன்று முஸ்லிம் மற்றும் மலையக தனித்துவ அரசியல் சாத்தியமற்றிருக்கும்.
இத்தேர்தலில் பெற்றவாக்குகள்:
UNP 50.43% SLFP 44.95
வாக்குகள்
2,569,199 2,289,860
வித்தியாசம் 279,339
மு கா - சு க ஒப்பந்தம் ( DPA) வெற்றியளித்திருந்தால் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் மறுதிசையில் சென்றிருந்தால் ஶ்ரீமா ஜனாதிபதியாகி இருப்பார். எனவே, இத்தேர்தலில் முஸ்லிம்களின் பேரம்பேசும் சக்தி நிரூபிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஜனாதிபதி முறைமை முஸ்லிம்களுக்கு ஓர் வரப்பிரசாதம்; என்ற கருத்து முஸ்லிம் கட்சிகளிடமும் முஸ்லிம்களிடமும் ஆழமாக பதிந்துவிட்டது.
1989 பொதுத்தேர்தல்
——————————
மறுபுறம் 1989 பொதுத்தேர்தலில் மு கா இல்லாமல் ஐ தே க 2,837,961 வாக்குகளைப்பெற்றது. ( 50.7%) அதாவது ஜனாதிபதித் தேர்தலைவிட 268,762 வாக்குகளை ஐ தே க மேலதிகமாக பெற்றது.
இதற்கு ஒரு காரணம் பலமான ஜனாதிபதியின் கட்சி என்ற அடிப்படையில் ஏற்பட்ட முன்னேற்றம். அதேநேரம் சில தேர்தல் தில்லுமுல்லுகள் சம்பந்தமாகவும் அப்போது பேசப்பட்டது. மறுபுறம் சு க யினர் பெருவாரியாக வாக்களிக்கவில்லை. மொத்த வாக்களிப்பு வீதம் 60.60 ஆகும்.
அதேநேரம் இங்கு இன்னுமொரு உண்மையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்; அதாவது 1988 ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்களிப்பு வீதம் 50.43 ஆகும். வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தால் அதன்மூலம் சிலவேளை ஶ்ரீமா வெற்றிபெற்றிருந்தால் ஜனாதிபதி முறைமையில் எந்தப் பேரம்பேசும் சக்தியும் முஸ்லிம்களுக்கு இல்லை; என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் வந்திருப்பார்கள். ஜனாதிபதி முறையமையை ஒழிக்கும் விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு மாற்றமாக, சிலவேளை த தே கூ இனது நிலைப்பாட்டை ஒத்ததாக இருந்திருக்கலாம்.
எது எவ்வாறு இருந்தபோதிலும் தேர்தலுக்குமுன் நிலைமை தெரியாததாலும் குறிப்பாக 1982ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் குடியுரிமை பறிக்கப்பட்ட ஶ்ரீமா போட்டியிடாமல் கொப்பேக்கடுவ போட்டியிட்டும் 5/6 பெரும்பான்மை இருந்தும் ஐ தே க பெற்ற வாக்குவீதம் 52.9 மட்டுமே என்ற நிலையில் வெற்றிதொடர்பாக பிரேமதாசவிற்கு இருந்த அச்சமே, அவசர அவசரமாக மு கா வின் கோரிக்கையை ஏற்க வேண்டியேற்பட்டது; என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
எது எவ்வாறு இருந்தபோதிலும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாதித்த மறைந்த தலைவரின் சாணக்கியம் வரலாற்றில் மறக்கப்பட முடியாது.
இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும். அதாவது ஒரு விடயத்தை சாதிப்பதில் எங்களது பேரம்பேசும் பலத்துடன் நமது பிரச்சினைகளை, நமது கோரிக்கையின் நியாயத்தை தெட்டத்தெளிவாக, அடுத்தவர் மறுக்கமுடியாத அளவு முன்வைக்கும் திறமை; என்பது ( convincing presentation) மிகவும் முக்கியமாகும்.
அது மறைந்த தலைவரிடம் நிறையவே இருந்தது. அது இன்றைய தலைவர்களிடம் குறைவாக இருக்கின்றது; என்பதைவிடவும் “இல்லை” என்பது நமது பல பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
உதாரணமாக, அத்திறமை இருந்திருந்தால், கல்முனைப் பிரச்சினையில் முழு நியாயமும் நமது பக்கம் இருந்தும் சுமந்திரன், முஸ்லிம் தலைவர்கள் நியாயமில்லாமல் தடுக்கிறார்கள்; என்று கூறுவாரா? சம்பந்தன் கடந்த ஒரு சில தினங்களுக்குமுன் ரணிலைச் சந்தித்தபோது பேசிய இரு பிரதான விடயங்கள், தீர்வுத்திட்டமும் கல்முனைப்பிரச்சினையும்- அவ்வாறு பேசும்போது சுமந்திரனின் அதே கருத்தை அவரும் ரணிலிடம் முன்வைத்திருக்கின்றார்.
அதேநேரம் சுமந்திரன் அதிர்வில் பேசும்போது ‘ கல்முனை பா உ தனது வீட்டில் வைத்து கல்முனை விடயத்தில் தமிழரின் கோரிக்கை நியாயமானது’ என ஏற்றுக்கொண்டதாக கூறுகின்றார். எங்களது பக்கநியாயத்தைத் தெட்டத்தெளிவாக அவர்களுக்கு கூறியிருந்தால் அவ்வாறு கூறமுடியுமா?
அல்லது, மாகாணசபைத் தேர்தல்கள் சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது அதிலுள்ள பாதிப்புக்களை அவர்களுக்குப் புரியவைத்திருந்தால் அவர்கள் அடிக்க வந்திருப்பார்களா?
எனவே, இங்கு கூறமுற்படுவது என்னவென்றால் சாதிப்பதற்கு பேரம்பேசும் சக்தி மட்டும் போதாது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; என்பதை மறைந்த தலைவர் நிரூபித்தார். பலயீனனிடம் புல்லல்ல; பொல்லே இருந்தாலும் அதைப்போட்டுவிட்டு ஓடுவானே தவிர, எதையும் சாதிக்கமாட்டான்; என்பதைத்தான் இன்று நமது முட்டில் தங்கியிருக்கின்ற அரசிலேயே எதையும் சாதிக்க முடியாமல் நாம் இருப்பது காட்டுகின்றது. இதனால் ஏற்பட்ட விரக்திதான் அன்று ஆபத்தானவர்கள்; என்று நாம் தூக்கிவீசிய அடுத்த தரப்பு வேட்பாளரை கண்ணை மூடிக்கொண்டு சிலர் ஆதரிக்க முற்படுவதுமாகும்.
சுருங்கக்கூறின் இன்று முஸ்லிம் வாக்குகள் பலகோணங்களில் பிரிந்து மீண்டும் ஆபத்தில்விழ முஸ்லிம்களே முற்படுவதற்கு பிரதான காரணம் இன்றைய அரசில் நமது பேரம்பேசும் சக்திக் குறைபாடு அல்ல. இந்த ஆட்சியைவிட இன்னுமொரு ஆட்சியில் இதைவிடக் கூடுதலான பேசும்பேசும் சக்தி எதிர்காலத்தில் கிடைக்குமா? என்பது நிச்சயமில்லை. ( இப்பந்தியில் குறிப்பிடப்படும் பேரம்பேசும் சக்தி ‘ பாராளுமன்ற பேரம்பேசும் சக்தி’ என்பதைக் கவனத்திற்கொள்க).
எனவே, ஜனாதிபதி முறைமையின் பேரம்பேசும் சக்தி பற்றி ஆராயும்போது அதுதொடர்பான பலவிடயங்களையும் ஆராய்ந்து அறிவுரீதியாக முடிவெடுக்க வேண்டுமேதவிர மேலெழுந்த வாரியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ முடிவெடுக்க முடியாது.
இது தொடர்பாக தொடர்ந்து ஆராய்வோம்.
( தொடரும் )