நூருல் ஹுதா உமர்-
அம்பாறை, தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிப் பகிஷ்கரிப்பின் 11ஆவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) அடையாள போராட்டமாக இந்த போராட்டம் முன்டெடுக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்த ஊதிய உயர்வை பெற்றுத்தர தயங்குவதாகவும் 2500 ரூபாய் சம்பள உயர்வானது ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போதும் கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் எனவும் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
நாடளாவிய ரீதியில் 15 பல்கலைக் கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்வு தரும் வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தொடர் போராட்டங்களால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் இவற்றை அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் கவனத்தில் எடுத்து விரைந்து தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வரை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.