செப்ரம்பர் - 16

சுஐப்.எம்.காசிம்-

செப்ரம்பர் பதினா றென்னும்

தேதியும் வரும் போ தெல்லாம்

நற்றவப் புதல்வர் அஷ்ரப்

ஞாபகம் மன துருக்கும்

திக்கற்ற சமூகம் ஒன்றாய்ச்

சேர்ந்தொரு அமைப்பில் வாழப்

பொற்பணி புரிந்த மேதை

புகழுடம் படைந்தா ரன்றே



ஆயிரம் நாலு நூறு

ஆண்டுகள் இந்த நாட்டில்

தேசிய இனமாய் வாழும்

சமூகத்து நலன்கள் காக்கப்

பேசிடும் இனப் பிரச்னைத்

தீர்விலே உரிமை சேர்க்கத்

தாயினும் இனிய அஷ்ரப்

தனிவழி அமைத்த சான்றோன்



கொற்றவன் மாண்ட பின்னர்

கொள்கைகள் பறந்தே வேண்டும்

ஒற்றுமை அகன்ற தாலே

ஒருவரில் ஒருவர் மோதிக்

கட்சிகள் பலவாய் ஆகிக்

களேபரம் ஆன தெண்ணிச்

சத்தியத் தொண்ட ரெல்லாம்

சலித்துளம் நொந்து போனார்



குற்றமும் குறையும் கூறும்

கும்பலாய்ப் பிளவு பட்டு

மற்றவர் நகைத்து நோக்கும்

மதிப்பிலாச் சமூக மானோம்

ஒற்றுமை சிதைந்த தென்ற

உண்மையை உணர்வார் யாரோ ?

இத்தலை முறையில் எங்கள்

உரிமைக்கு வழிதான் உண்டோ!



ஒற்றுமை பேணி முஸ்லிம்

அரசியல் செய்வோ ரெல்லாம்

ஒரணி திரண்டு நல்ல

பேரணி யாக வேண்டும்

சத்திய சமுதா யத்தின்

தார்மீக உரிமை காக்க

இத்தினம் ஒன்று பட்டு

இயங்குதல் கடமை யன்றோ !



எத்தனை தலைமை தன்னை

எம்மினம் கண்ட போதும்

ஒப்பிலாத் தலைமைப் பண்பால்

உயர்ந்தவர் மேதை அஷ்ரப்

தப்பிய வழியில் நின்று

தவிக்கிறோம் இறைவா! அந்தச்

சற்குணர் அஷ்ரபைப் போல்

தலைவனைத் தருவாய் நீயே!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -