காரைதீவு பிரதேசசபை விசேடஅமர்வில் ஏகமனதாக நிறைவேறியது.
காரைதீவு நிருபர் சகா-கடலுக்குச்சென்று ஆறு நாட்களாகியும் வீடுதிரும்பாத காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட மீனவர்களின் நிர்க்கதியான குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ருபாவை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் இன்று(23) திங்கட்கிழமை காரைதீவு பிரதேசசபையின் விசேடஅமர்வின்போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இவ்விசேடஅமர்வு சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்இன்று(23) சபாமண்டபத்தில் நடைபெற்றது.
அவ்வமயம் கடந்த 18ஆம் திகதி காரைதீவுமாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக் இயந்திரப்படகில் சென்ற 3மீனவர்கள் இன்னும் வீடுதிரும்பவில்லை. சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன்(வயது36) இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது37) காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) ஆகியோரே இவ்விதம் கடலில் மாயமானவர்களாவர்.
அவர்கள் ஆறு நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்கள் என்னவானார்கள் என்றுகூடத்தெரிவில்லை. இந்நிலையில் இவர்களின் குடும்பங்கள் நிர்கதியாகி வீதிக்கு கவலையுடன் வந்துள்ளன. எனவே இவர்களுக்கு சபை உதவவேண்டும் என சபை உறுப்பினர்களான இ.மோகன் மு.காண்டீபன் ஆகியோர் வேண்டுகோள்விடுத்தனர்.
அதனையடுத்து தவிசாளர் ஜெயசிறில் ஏலவே தயாரித்திருந்த பிரேரணையான கடலுக்குச்சென்று இதுவரை வீடுதிரும்பாத காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட மீனவர்க்கு தலா 10ஆயிரம் ருபாவை எதிர்வரும் 3தினங்களுள் வழங்கவேண்டும் என்ற பிரேரணையை சபையின் தீர்மானத்திற்கான முன்மொழிந்தார்.
சபையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக கையை உயர்த்தி ஆதரவளித்தனர். ஆதலால் இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் அத்தனைவட்டாரங்களிலும் கிறவல்போடவேண்டி தீர்மானிக்கப்பட்ட வீதிகள் அனைத்திற்கும் எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் கிறவல் போடப்படவேண்டும்.
நீரிணைப்பிற்காக ஒவ்வொரு உறுப்பினருக்கும் 40ஆயிரம் ருபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்திரங்களை எதிர்வரும் 11.10.2019க்குமுதல் ஒப்படைத்து பெற்றுக்கொள்ளவேண்டும். என்றார்.
காரைதீவு எல்லைக்குள் பிரதேசசெயலகத்தால் வீதிகள் செப்பனிடப்படுகின்றபோது அந்தந்த வட்டார உறுப்பினர்களுக்கு கட்டயாயம் தெரியப்படுத்தப்படவேண்டும். என்றும் கோரப்பட்டது.
கடந்த ஒன்றரை வருடங்களில் பிரதேச சபையால் பிரதேசசெயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.