இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற விசேட திட்டம், அரச ஒசுசலவில் விசேட விலைக்கழிவு வழங்க இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை மேற்கொள்வதாக சிலோன் மீடியா போரத்திடம் உறுதியளித்துள்ளார்.
சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமுக்கும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையிலான பிரதிநிதிகளுக்கு மிடையிலான சந்திப்பு அமைச்சரின் நிந்தவூர் காரியாலயத்தில் நேற்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இச்சந்திப்பில் சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், செயற்குழு உறுப்பினர்களான எம்.எம்.ஜபீர், ஏ.ஆர்.சஹீர்கான், எம்.வி.றிம்சான், என்.எம்.அப்றாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகளால் அரச வைத்தியசாலைகளில் ஊடகவியலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெறுதல், சத்திர சிகிச்சை உள்ளிட்ட நோயாளர்களை பார்வையிடுதல் தொடர்பில் தேசிய ரீதியில் ஒரு விசேட முறைமையினை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு அரச ஒசுசலவில் ஊடகவியலாளர்களுக்கு 20% வீதம் விலைக்கழிவில் மருந்து உள்ளிட்ட குளிசை வகைகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை இராஜாங்க அமைச்சரிடம் கையளித்தனர்.
சிலோன் மீடியா போரத்தின் மேற்குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம்,
நாட்டின் மூவின ஊடகவியலாளர்களின் சுகாதார நலனில் கவனமெடுத்து இக்கோரிக்கையினை விடுத்துள்ள சிலோன் மீடியா போரத்தின் தேசிய வேலைத்திட்டத்தினை வரவேற்கின்றேன்.
நாட்டின் மூவின ஊடகவியலாளர்களும் இன நல்லிணக்கத்திற்கும், அபிவிருத்திற்கும் பாரிய பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர்.
நாட்டின் எல்லாத் துறைகளில் ஏற்படும் பிரச்சினைகள், குறைபாடுகளை, மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஊடக வாயிலாக வெளிக்கொண்டு வருவதும்; அரசியல் தலைவர்களின் மக்கள் நல செயற்பாடுகளையும் வெளிக்கொண்டு வருவதும்; ஊடகவியலாளர்களாகும்.
ஊடகவியலாளர்கள் அரச வைத்தியசாலைகளில் மருத்துவ சிகிச்சை பெறுதல், சத்திர சிகிச்சை உள்ளிட்ட நோயாளர்களை பார்வையிடுதல் தொடர்பில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமையை நான் அறிவேன்.
ஊடகப்பணி சமூக மாற்றத்திற்கான பணியே அன்றி வருமானம் உழைக்கும் பணியல்ல. அது கௌரவமாக எல்லோராலும் மதிக்கக் கூடிய பணியாகும்.
நாட்டின் ஊடகவியலாளர்களை கௌரவிக்கு முகமாக சிலோன் மீடியா போரம் முன்வைத்துள்ள ஊடகவியலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெறுதல், சத்திர சிகிச்சை உள்ளிட்ட நோயாளர்களை பார்வையிடுதல் தொடர்பில் தேசிய ரீதியில் ஒரு விசேட முறைமையினை அமுல்படுத்தல், அரச ஒசுசலவில் ஊடகவியலாளர்களுக்கு 20மூ வீதம் விலைக்கழிவில் மருந்து உள்ளிட்ட குளிசை வகைகளை கொள்வனவு செய்வதல் உள்ளிட்ட கோரிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கவனத்திற்கு கொண்டு சென்று இதனை நிறைவேற்றித்தர முழு ஒத்துழைப்பினை வழங்குவேன் என இதனைபோது உறுதியளித்தார்.