முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் திருத்தங்களுக்கான சட்ட வரைபு, பாராளுமன்றத்தில் அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆவன செய்ய முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, அமைச்சர் ஹலீமிடம் கடிதம் மூலம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், பைஸர் முஸ்தபா எம்.பி., அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்பு உடனடியாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் திருத்தங்களுக்கான சட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். தவறும் பட்சத்தில், நாம் கூட்டாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தேவைப்படாத ஒன்றாக ஆகிவிடும்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் நான் உங்களது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். எனது கோரிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உலமாக்கள் மத்தியில் கருத்தொற்றுமையை உருவாக்கின.
பின்பு, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக தீர்மானமொன்றுக்கு வந்தனர். நானும், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட, நாங்கள் முஸ்லிம் அமைச்சர்களுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கினோம்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள், முஸ்லிம் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறும் அமைப்புக்களுடன் திருத்தங்களை மேற்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். கருத்தொற்றுமை அனைத்து விடயங்களிலும் எட்டப்படவில்லை. எனினும், பெரும்பாலான விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
பின்பு, நீதியமைச்சும் உங்களது அமைச்சும் இணைந்தே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையினால் அது அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான சட்ட வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசிம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.