நான் எனும் நீ
🍀🌺🌺 🍀🌺🌺🍀
நான் எனும் நீ
இவ்வுலகில் இனி
ஒரு கணமும்
வாழ முடியாது
ஒன்றுமே இல்லாத என்னை
நான் ஆகக் காட்டிய உன்னை
இனி வாழவிடவே மாட்டேன்
என்னை மரணம் அணைக்கு முன்னே
உன்னை உயிரோடு
இருக்க விடக் கூடாது
எனக்கோ ஒரேயொரு வாழ்க்கை
அதில் உன்னை எப்போதும்
திருப்திப்படுத்த ஓடியதால்
என்னை வருத்தியது மட்டுமன்றி
எதுவுமே எச்சமில்லை
என்றோ ஒரு நாள்
உன் உதிரிப் பாகங்களான
என் இளமையும் என் அழகும்
என் உற்சாகமும் என் அறிவும்
என் ஆற்றல்களும் என் நினைவுகளும்
என்னை விட்டு ஓடும் போது
நீ ஒரு நொடிதானும்
எனக்கருகே இருக்கப் போவதில்லை
என்னையும் என்னைச் சுற்றியுள்ளோரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும்
நான் எனும் நீ
எந்த வேளையும் என்னை விட்டோடுதற்காய் உன்னிப்பாய்
ஒரு சிறுத்தையைப் போல் பதுங்குவது
என்னிரு கண்களுக்கும்
இப்போது தெரிகிறது!
என்னோடு இருந்து
என்னையே ஏமாற்றும்
உன்னை நான் இனி ஒரு கணமும்
வாழ விடக் கூடாது!
உனக்குச் சதா
தீனி போட்டுக் கொண்டிருந்ததால்
எனக்கு ஏற்பட்ட
இழப்புகளையும் இன்னல்களையும்
நீ அறிவாயோ?
நான் எனும் நீதான் என்னை
அவனிடத்தில் இருந்தும் பிரித்தாய்!
அவன் என்னோடு எப்போதும்
இருந்துகொண்டிருக்கையில்
அவனைத் தேடி என்னை அலைய வைத்த
எனது மாபெரும் எதிரியும் நீயேதான்!
அவனுக்கும் எனக்கும் இடையில்
நீ இனிமேல் இருக்கவே கூடாது
நீ என்னை நிசமாக எனக்கு
காட்டத் தவறியதால் தான்
என்னை நானென எண்ணி ஏமாந்தேன்
என்னைப்போல் எத்தனையோ பேர்
அவர்களை யாரென்று அறியாநிலையில் ஏமாற்றமடைந்தவர்களாய்
நோய் பிடித்து படுக்கையிலே கிடக்கின்றனர்.
வாசனைகள் பூசியிருந்த
அவர்களின் உடம்புகளிலிருந்து
வியர்வையும் இரத்தமும் சீழும்
மூக்கை புடைக்க வைக்கின்றது
வானம் பிளக்கப் பேசிய அவர்களின்
வாய்களெல்லாம் ஒரு
கோணத்தில் கொன்னிக் கொண்டிருக்கின்றன
வீரத்தோடு வாளெடுத்து
வீசிய அவர்களின் கைகளெல்லாம்
கைத் தடிகளையும் தூக்கிக் கொள்ள முடியாமல்
நடிங்கிக் கொண்டிருக்கின்றன!
ஆயிரக் கணக்கில் சிலவு செய்து
அலங்கரித்த அவர்களின் உடல்கள்
நிர்வாணத்துடன் மையித்துக்களாக
மல்லாந்து கிடக்கின்றன!
மாடாமாளிகைகளை உடைத்தெறிந்துவிட்டு
வானுயரக் கட்டிடங்களைக் கட்டி
தங்கத்தால் கட்டில்கள் செய்து
வெள்ளிப் பாத்திரங்களில்
பாலும் நீரும் பருகியவர்கள்
மண்ணை முத்தமிட்டவர்களாய்
மண்ணறைக்குள் மறைந்துவிட்டார்!
பாவம்; இறுதி மூச்சு வரை
அவர்கள் யாரென்பதை
அவர்களே அறியவில்லை!
ஏமாற்ப்பட்டவர்களை ஏந்தி
தோள்களின் மீது சுமந்து சென்று
அவர்களின் ஏமாற்றங்களுக்காக
அவர்களை மன்னிக்குமாறு
இறைவனைப் பிரார்த்திக்கும்
ஏமாந்த கூட்டங்கள்
அவர்களோடு என்னையும்
இதுவரை சேர்த்து வைத்திருந்த
நான் எனும் நீ
எனக்கு ஒரு வெறும் பொய்யே!
அவனிடமிருந்து வந்த அம்சங்களில் ஒன்றை
அவனிடமிருந்து பிரிக்கின்ற அனியாயத்தை
நடக்க நாம் விடலாமோ!
அவனிடமிருந்து வந்த அம்சம்
ஆனாலும் அது அவனுமல்ல
அவனின் நுழைவு இல்லாத அம்சங்களும் இங்கு இல்லை
இருந்து வந்த இடமும் தெரியாது
இருக்கப் போகும் இடமும் புரியாது!
கடந்து வந்த பாதையெனும்
நினைவுகட்கும்
கடக்கப்போகும் பாதையெனும் கனவுகட்கும், இடையில்
எங்கிருந்து இங்கே
இங்கிருந்து எங்கே என்கின்ற கேள்விகட்கு
எவ்வித விடையும் தெரியாமல்
வந்த பாதை சரியா?
வலமா? இடமா? இல்லை
முன்னே முடங்கிச் செல்லும்
முட்கள் செறிந்த பாதையா?
என்பவைகள் புரியாமல்
ஒன்றுமே செய்ய முடியாமல்
ஒடுங்கியே கிடக்கு மென்னை
நானாக்கி ஏமாற்றும் உன்னை
இனியும் உயிரோடு இருப்பதற்கு
அனுமதிக்கவே முடியாது.
[எம்.எச்.எம் அஷ்ரஃப் (கவிஞர் திலகம்)
1996 ஆம் ஆண்டு எழுதிய கவிதை
"நான் எனும் நீ" நூலில் இருந்து]
#ஜெபுறாஸ் காசீம்#