முச்சக்கர வண்டிச் சாரதிகள் பாடசாலை மாணவர்களை வழியில் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன், மாணவர்களுடன் மிகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் வேண்டும் என, மினுவாங்கொடை போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுடன் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது கருத்தில், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு சாரதிகளும் வீதிச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முச்சக்கர வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படும் மாணவர்கள் அனைவரும், நாளைய நம் நாட்டுத் தலைவர்கள் என்பதை ஒவ்வொரு சாரதிகளும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். சாரதிகளின் சேவைகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும்.
சில சாரதிகள் ஆகக் கூடுதலான மாணவர்களை பணத்திற்காக ஏற்றிச் செல்லும் வழக்கமுடையவர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலைமை நம்மிடமிருந்து முற்றிலும் மாறவேண்டும். அத்துடன், இதுபோன்ற நிலைமைகளை முடியுமான அளவு தவிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். அநேக இடங்களில் பொதுவாக முச்சக்கர வண்டிச் சங்கங்கள் இயங்குகின்றன.
இதேபோன்று, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் புதிதாக சங்கம் ஒன்றினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்காக, எமது போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுடன் இணைந்து ஒத்துழைக்க முன்வர வேண்டும்.
மாணவ மாணவிகளின் உயிர்களுடன் முச்சக்கர வண்டிச் சாரதிகள் விளையாட முனையக் கூடாது. உயிர்களின் பெறுமதியினைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்றார்.