நெஞ்சம் மறப்பதில்லை...!


எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி-
க்கள் மனங்களில் மறைந்தாலும் நினைவுகளாக வாழ்பவர்கள் ஒரு சிலர்கள் தான். அந்த வரிசையில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களும் ஒருவர். இவர் மரணித்து 19வது வருடம் பூர்த்தியானாலும் மக்கள் மனங்களில் இன்றும் நினைவின் இமயமாக வீற்றிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.
1948 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 23 ஆம் திகதி சம்மாந்துறை மண்ணில் ஹுஸைன் விதானையார், மதீனா உம்மா தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். இந்த பிறப்பு தான் முஸ்லிம் சமூகத்தின் விடுதலைச்சுடர் என அன்று பலரும் உணர்ந்திருக்கமாட்டார்கள். இன்று அதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள்.
இந்நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்ந்த போதிலும், முஸ்லிம் சமூகம் தமிழ்ப்பேசும் சமூகமாக தமிழர்களுடன் சேர்த்து பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் தனித்துவமான இனமென தேசியத்திலும், சர்வதேசத்திலும் அடையாளப்படுத்திய கட்சியாக இன்று வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது.
அஷ்ரஃப் என்ற நபர் தனிப்பெரும் ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டவராகக் காணப்பட்டார். சட்டத்துறையில் சட்டத்தரணியாக, இவர் 1995 இல் அமைச்சராக இருந்த போதே சட்டமுதுமாணிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். 1997 இல் ஜனாதிபதி சட்டத்தரணியானார். அது மாத்திரமின்றி சமூக அக்கறை கொண்ட மனிதராக, கவிஞராக, மும்மொழி தேர்ச்சி கொண்டவராகவும் திகழ்ந்தார்.
அன்றைய சூழ்நிலையில் இஸ்லாமியப் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்ட அஷ்ரஃப், சமூகத்தின் அவலநிலை கண்டு இவற்றுக்கான தீர்வுகளை அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சிகளை இன்று முஸ்லிம் சமூகத்தைப்பல கூறுகளாக அமைச்சுப் பதவிகளுக்காக அதிகார ஆசையிலும் பேரினவாதிகளின் விருப்பத்திற்கேற்ப பிரிந்து சென்றவர்கள் செய்கின்ற முயற்சி போன்றதல்ல.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியைத்தொடங்கி அதன் பின் அரசியலில் ஈடுபட்டவரல்ல. அஷ்ரஃப், அரசியல் ரீதியாக இச்சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அன்று பலருடனும் சேர்ந்து முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கட்சியை 1977 ஆம் ஆண்டு உருவாக்கினார். பின்னர் அதிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து செயற்பட்டார். தமிழ் தலைவர்களுடனும் நல்லுறவைத்தொடர்ந்தார்.
இவ்வாறான அரசியலை மெற்கொண்ட போதும் அவைகள் வெற்றியளிக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தை தமிழ் பேசும் சமூகமாகவே பார்க்கப்பட்டது. இது தான் முஸ்லிம் சமூகம் தனித்துவமானது. ஒரு சமூகமென்பதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு கட்சியின் அவசியம் உணரப்பட்டது. 1981 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தைப் பொறுப்பேற்று அஷ்ரஃப் 1986 ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரகடனப்படுத்தினார்.
இவ்வாறு கட்சி உருவாக்கும் போது அவர் பேரினவாதிகளின் ஏஜன்டாகவோ, அமைச்சராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ, பெரும் செல்வந்தனாகவோ இன்று கட்சி உருவாக்கியவர்கள் போன்றிருக்கவில்லை.

மாறாக, சமூக விடுதலைப் போராளியாகவே தனது பயணத்தை முன்னெடுத்தார். அதில் பல சவால்களை எதிர்நோக்கினார். ஆனாலும், சமூக விடுதலை எனும் வேட்கை அவரைத்தூங்கவிடவில்லை. அவருடன் இணைந்து சமூக விடுதலைக்காக தங்களின் உயிரையும் கொடுக்கப் போராளிகள் முன்வந்தார்கள்.
இவ்வாறான சமூக உணர்வுள்ளவர்களின் வருகை, அவர்கள் செய்த உயிர்த்தியாகம், கட்சி வளர்ப்பதற்கு ஒவ்வொரு ஊராக பரதேசிகளைப்போல் அழைந்து தான் இந்த கட்சியை வளர்த்தார்கள். அவர்கள் மேற்கொண்ட தியாகங்கள் தான் இன்று வரை மக்கள் மனங்களில் இந்த கட்சி வேரூன்றிக் காணப்படுகிறது.
1987 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இம்மாகாண சபைத்தேர்தல் 1988 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இத்தேர்தல் முதலில் வடகிழக்கிற்கப்பால் நடைபெற்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டு 12 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதென்பதுடன், வடகிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சாணக்கியமாகச் செயற்பட்டு போட்டியிட்டு 17 ஆசனங்களைப் பெற்று வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகக் கட்சியின் அன்றைய தவிசாளர் சேகு இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு தனது அரசியல் காய்நகர்தல்களை ஆரம்பித்த அஷ்ரப், 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் அன்றைய பிரதமர் ரணசிங்க பிரமதாஷா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி 12.5% ஆக இருந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யும் வெட்டுப்புள்ளியை 5% குறைத்து சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக்கட்சிகள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. தலைவர் அஷ்ரப் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டுச்சேர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டது.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் சந்திரிக்கா பண்டார்நாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் அமைவதற்கான காரணகர்த்தாவாக இருந்தார். அதாவது ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸை அஷ்ரப் மாற்றியமைத்தார்.
இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட ஆட்சியில் கப்பல், துறைமுகங்கள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவ்வமைச்சினைப் பொறுப்பேற்று பல்வேறு சேவைகளை மக்களுக்கு அவர்களின் காலடியில் கொண்டு சேர்த்தார். அத்தோடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அவர்களின் வீட்டுக்கதவுகளைத்தட்டிக் கொடுக்கப்பட்ட நிகழ்வுகளும் இவரின் காலத்தில் நிகழ்ந்தது.
இந்த ஆட்சியில் தனக்கான வாய்ப்புகளை தன் சமூகத்திற்காக தென் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒலுவில் துறைமுகம் என பல அபிவிருத்தி, உரிமை விடயங்களில் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் இந்த கட்சியை வளர்த்து அரசியல் ரீதியாக அதிகாரம் பெற்ற போதும், பல சவால்களைச்சந்தித்தார். கூடவே இருந்தவர்களின் துரோகங்களையும் சந்தித்தார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமூக விடுதலைக்குரலை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அன்றைய உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உயிரைத்துச்சமென மதித்து ஓங்கி ஒலித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்து சிந்தித்த அஷ்ரஃப் 1999 ஆம் ஆண்டு தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.
சமூகம் சார்ந்து தூரநோக்கோடு சிந்தித்துச் செயற்பட்டதனால் பல எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருந்தார். இந்தச்சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் போராட்டத்தில் தன்னுயிரையும் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி துறந்தார். இன்றுவரை மக்கள் மனங்களில் நீங்கத இடத்தைப் பெற்றுக்கொண்ட தலைவனாக மிளிர்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -