சட்டத்தரணிகள் பௌத்த பிக்குகளினால் நேற்று முல்லைத்தீவில் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிமன்ற தீர்ப்பை மதியாமல் பிக்குகள் நடந்துகொண்டதையும் கண்டித்து இன்று கல்முனை நீதிமன்ற கட்டிட தொகுதி முன்னிலையில் கண்டன எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி ஸாரிக் காரியப்பர் தலைமையில் ஒழுங்கு செய்திருந்த இந்த நீதிமன்ற நடவடிக்கையை பகிஷ்கரிக்கும் நடவடிக்கையில் சுலோகங்களை ஏந்தி தமது ஆதரவை சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், நீதி சகலருக்கும் சமனாக கிடைக்க வேண்டும். சகல பிரதேசங்களுக்கும் நீதி சமனாகவே அமுல்படுத்தப்பட வேண்டும். சட்டதரணிகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். நேற்று நடைபெற்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் நீதிக்கு அபகீர்த்தி நடக்கும் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் எமது போராட்டம் தொடரும் என்றனர்.