இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவ அரசியல் அடையாளத்தினை பெற்றுக்கொடுத்த மாபெரும் அரசியல் தலைவர் அஷ்ரப் அவர்கள் சஹீதாகி இன்றுடன் பத்தொன்பது வருடங்களாகின்றது.
இந்நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் மட்டும் வாழ்கின்றார்கள் என்றே உலகம் நம்பியது. எட்டு சதவீதமாக வாழ்ந்த இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் ஒரு தனித்துவ பாரம்பரியங்களை கொண்ட ஒரு தேசிய இனம் என்ற உண்மையை உலகம் அறியவில்லை.
இந்நாட்டு முஸ்லிம் மக்கள் சிங்கள, தமிழ் அரசியல் கட்சிகளிலும், தமிழீழ ஆயுத இயக்கங்களிலும் இணைந்துகொண்டு அக்கட்சிகளினதும், இயக்கங்களினதும் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தங்களது தனித்துவ அரசியல் அடையாளத்தினை இழந்திருந்தார்கள்.
ஆளும் சிங்கள தேசிய காட்சிகளில் அமைச்சர்களாக இருப்பவர்களே முஸ்லிம் மக்களின் தலைவர்கள் என்ற நிலை அப்போது இருந்தது. முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது தனது இனத்துக்காக குரல் கொடுக்க முடியாதவர்களாக அந்த தலைவர்கள் இருந்தார்கள்.
இந்த காலகட்டத்திலேயே தனது இனம் அரசியல் உரிமையினை பெற்று உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்ற அடிப்படை உணர்வினை கொண்டிருந்த சட்டத்தரணி அஷ்ரப் அவர்கள் தனது ஆரம்பகால அரசியள் பயணத்தை தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்து ஆரம்பித்தார்.
அவர் நினைத்திருந்தால் சிங்கள தேசிய கட்சிகளில் இணைந்துகொண்டு அவர்களின் சலுகைகளை பெற்று சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் சிறுபான்மை தமிழ் கட்சியுடன் பயணிப்பதன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அதே அரசியல் உரிமையினை தனது சமூகத்துக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்று நம்பினார்.
1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் வெவ்வேறாக இருந்த வடக்கும் கிழக்கும் ஒரேமாகானமாக இணைக்கப்பட்டபோது, இம்மாகானங்களில் செறிவாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அரசியல் அனாதையாக்கப்பட்டிருந்தார்கள்.
1988 இல் நடைபெற்ற வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் விடுதலை புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 168,038 வாக்குகள் பெற்றதுடன் பதினேழு மாகாணசபை உறுப்பினர்களை பெற்றிருந்தது.
அதாவது முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அங்கீகாரமும், ஆணையும் வழங்கியதுடன், சட்டத்தரணி அஷ்ரப் அவர்களை முஸ்லிம்களின் தேசிய தலைவராக அங்கீகரித்தார்கள்.
1989 இல் முஸ்லிம் காங்கிரஸ் முதன்முதலாக பொதுத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு நாடு முழுவதிலுமிருந்து 202,016 வாக்குகளை பெற்று நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றது.
முஸ்லிம் காங்கிரசின் தோற்றமும், அதனை தொடர்ந்து வந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் மூலமாக முஸ்லிம் மக்களின் ஆணை இக்கட்சிக்கு கிடைத்ததனால் இலங்கையில் பேரம் பேசும் சக்தியுள்ள ஓர் தேசிய அரசியல் கட்சியாக வளர்ச்சியடைந்ததுடன், அதன் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஆளுமையுள்ள தலைவராக பார்க்கப்பட்டார்.
இதனால் காழ்ப்புனர்ச்சிகொண்டு சிலர் தலைவர் அஷ்ரப் அவர்களை கொலை செய்வதற்கும் முயன்றனர். அந்தவகையில் ஈ.என்.டி.எல்.எப் என்ற ஆயுத குழுவினர் 1989 இல் கொலைசெய்ய முயற்சித்தபோது மயிரிழையில் தலைவர் உயிர் தப்பியிருந்தார்.
1989 தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் முஸ்லிம் மக்களுக்காக தலைவர் அஷ்ரப் அவர்கள் துனிச்சலுடன் குரல் கொடுத்தார்.
199௦ ஆம் ஆண்டில் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததன் பின்பு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் சுட்டு கொல்லப்பட்டார்கள். அப்போது புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தலைவர் தனது அரசியலை துணிச்சலுடன் முன்னெடுத்தார்.
தலைவர் அஷ்ரப் அவர்கள் ஓர் சிறந்த அரசியல் வாதியாக மட்டுமல்லாது, சிறந்த சட்டத்தரணியாகவும், ஓர் சிறந்த கவிஞனாகவும் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். அவர் எழுதிய கவிதை தொகுப்பான “நான் எனும் நீ” என்ற கவிதை நூல் சிறந்த வரவேற்பினை பெற்றிருந்தது.
2000 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையிலான பொதுஜன முன்னணியுடன் இணைந்து இரண்டாவது தடவையாக முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபடும்பொருட்டு 16.௦9.2௦௦௦ அன்று வானூர்தி மூலம் அம்பாறையை நோக்கி தலைவர் அஷ்ரப் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக வானூர்தி வெடித்து சிதறியதன் மூலம் சஹீதானார். இவரது மரணம் திட்டமிட்ட கொலை என்றே சந்தேகிக்கப்படுகின்றது.
அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து இன்றைய தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தனது பயணத்தை தொடர்கின்றார்.