தன் அன்பான மனைவியையும், பாசமிக்க ஐந்து மக்களையும் விட்டுப்பிரிந்த அன்னார், எவ்வித தீய பழக்க வழக்கங்களையும் கொண்டிராது, மார்க்க ஒழுக்க விழுமியங்களுடன் இறுதி மூச்சு வரை வாழ நேர்ந்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு அளித்த பெறும் பேறு எனலாம்.
பாசத்தையும், நேசத்தையும் பிறவிக் குணமாகக் கொண்ட அன்னாரோடு, வஞ்சகமும் வெஞ்சினமும் ஒன்று சேர முடியாமல் தன் கூட்டுறவை முறித்து, ஆயுள் பகை கொண்டது எனலாம். 78 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அன்னாரின் பிரிவு, எங்களுக்கு எந்நாளும் நீங்காத நினைவாக இருக்கின்றது.
அறுபது ஆண்டுகளுக்கு முன் "ஹமீதியா ஜெம் பெலஸ்" என்ற பெயரில் நகை வியாபாரத்தில், தன் அயராத முயற்சியுடன், தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அன்னாருக்கு வாய்மை, நேர்மை, நாணயம், நம்பிக்கை போன்ற உயர்ந்த குணங்கள் தொழில் ரீதியில் உயர்வடைவதற்கு உரமிட்டன எனலாம்.
கொழும்பு - 09, தெமட்டகொடை, ஆராமய வீதியில், தன் சொந்த இருப்பிடத்தில் தனது காணியில் ஒரு பகுதியை வழங்கி, "மீராணிய்யா மஸ்ஜித்" மற்றும் மத்ரஸாவை உருவாக்கத் துணை புரிந்து, பன்னிரெண்டு ஆண்டுகளாக அவற்றின் உறுப்பினராக சேவை செய்தார். அதன்பின், சிறு கால இடை வேளைக்குப் பிறகு கொழும்பு - 11, டாம் வீதியில் அமைந்துள்ள "மஸ்ஜிதுல் ஹிதாயா" பள்ளிவாசல் தலைவராக பதினைந்து ஆண்டுகளாக, சக உறுப்பினர்களோடு, தோளோடு தோள் நின்று பல ஏற்பாடுகளைச் செய்து, தன் இறுதி இறை வணக்கத்தையும் நிறைவேற்றும் பெரும் பேற்றைப் பெற்று, வீடு திரும்பிய சில நிமிடங்களில் மிக அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
தன் பொருட் செல்வத்தை தன் வீட்டோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாது, உற்றார் உறவினர்களுடன் நடை தளர்ந்தவர்களுடன், நல மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட விதம் அபாரம். இக்குடும்ப வட்டத்தில் வேறு எவராலும் நிரப்ப முடியாத ஒரு பெரும் இடை வெளியை, அன்னாரது பிரிவு ஏற்படுத்தி விட்டதென்றால் மிகையல்ல.
அவரது இறுதிச் சடங்கில், கொடு வெயிலின் கொடூரத்தையும் பாராது, பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மக்களின் காட்சி, இயற்கை எய்தியவர் தன் ஜீவிய காலத்தில் எவ்வாறு வாழ்ந்தார் என்பதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது.
அன்னாரது மறுமை ஈடேற்றத்துக்காக பிரார்த்திப்போம்.
- மௌலவி ஐ. ஏ. காதிர் கான் (தீனிய்யா),
மினுவாங்கொடை.