எம்.பஹ்த் ஜுனைட்-
பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதால் உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படப் படல் வேண்டும் எனக் கூறி புதன்கிழமை (18) மட்/மம/காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தின் முன்பாக பெற்றோர்கள் முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
14 ஆரம்ப வகுப்புகளில் 470 மாணவர்கள் கற்க்கும் நிலையில் 11 ஆரம்ப ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றுகின்றனர் 3 வகுப்புக்களில் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் அம் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் "எங்களது கல்வியை வீணாக்காதீர். அடிக்கடி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் எங்கள் நிலமை என்ன?" ,"நிரந்தரமாக ஆசிரியர்கள் தேவை " போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் அவர்கள் ஒருவாரத்திற்குள் உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடி இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாகக் வாக்குறுதி அளித்ததுடன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக பொறியியலாளர் சிப்லி பாறூக், கே.எல்.பரீட் , நகர சபை உறுப்பினர்களான பெளமி,ஜவாஹிர் உள்ளிட்ட பிரமுகர்கள் உத்தரவாதம் அளித்ததன் பின்னரே பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பாடசாலையை திறக்க அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்கது.