விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிர்மாணிக்கும் வேலை உடனடியாக ஆரம்பிக்கும் : இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம்
அலுவலக செய்தியாளர்-
அஸ்ரப் நினைவு வைத்தியசாலையில் எங்களால் கொண்டுவரப்பட்ட ஐந்து மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதால் சமூக வலைத்தளங்களில் தாம் நினைப்பதையெல்லாம் சரியென எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த வைத்திசாலையுடன் சேர்த்து இன்னும் ஏழு வைத்தியசாலைக்கும் நாங்கள் ஒப்பந்தக்காரர்களிடம் வேலையை கையளித்திருக்கிறோம்.
சில வைத்தியசாலைகளில் வேலைகள் பகுதியளவில் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அஸ்ரப் நினைவு வைத்தியசாலையில் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதற்க்கு காரணம் நானோ அல்லது சுகாதார அமைச்சோ காரணமில்லை. ஒப்பந்தகாரர்களின் தாமதமே. நான் நிதியொதுக்கீடு செய்யாமல் எந்தவித வேலைகளையும் ஆரம்பித்துவைப்பதில்லை. விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடங்களை நிர்மாணிக்கும் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கும் நடவடிக்கையை அரசு செய்ய முன்வந்துள்ளது. என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
இன்று மாலை கல்முனை அஹமட் அலி வைத்தியசாலையின் திறப்புவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது உரையில்,
கரையோர பிரதேச வைத்தியசாலைகளை நவீனமயப்படுத்தி மக்களின் பாவனைக்கு கையளிப்பதே எமது இலக்கு. இன்று நிறைய நோயாளிகள் சரியான உபகரணங்களும், வைத்திய வசதிகளும் இல்லாமையால் சிகிச்சைக்கான நேரம் அதிகமாக செல்வதனால் பல துயரங்களை அனுபவிக்கின்றனர். வைத்தியர்களை விட நோயாளிகளின் உறவினர்கள் வைத்தியர்களாக மாறி வைத்தியசாலைக்கு தலையிடியை தோற்றுவிக்கும் நிலையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்த காலங்களில் வைத்தியர்கள் செய்த தவறுகளை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஆளும் தரப்பில் அல்லது எதிர்தரப்பில் இருக்கலாம். அல்லது அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்த பிரதேச மக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு திட்டடங்களை வகுக்க வேண்டும்.
எமது பிரதேச வைத்தியசாலைகளில் அவசர தேவைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தேவையான தொழிநுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்ய விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளோம். தனியார் வைத்தியசாலையானது பணம் படைத்தோருக்கும், பொறுமையில்லாதவர்களுக்குமானதாகும் . ஆனால் அரச வைத்தியசாலைகள் ஏழைகளின் நலனில் எப்போதும் அக்கறைகொண்டு செயற்படும் நிறுவனமாகும்.
தலைநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையை நாடி செல்லும் பலரும் பணமில்லாது போகும் போது அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதை கண் கூடாக கண்டுள்ளோம். தலைநகரில் மட்டுமே இருந்த புற்றுநோய் வைத்தியசாலையை கிழக்கு மக்களின் நலனை கவனத்தில் கொண்டு கிழக்கில் நிறுவியது போன்று விரைவில் எமது பிரதேச வைத்தியசாலைகளில் நவீன உபகரணங்களை கொண்டு மக்கள் சேவையை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும்,இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீரலி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.ஏ.ரஸாக், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், பிரதி முதல்வர், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.