இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதையும், அது கோதபாய ராஜபக்ஷ்தான் என்பதையும் மக்கள் உறுதியாகவும் தெளிவாகவும் ஏகமனதாகத் தீர்மானித்துவிட்டனர் என, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட முஸ்லிம் சம்மேளன அமைப்பாளருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். உவைஸ் தெரிவித்தார். மக்கள் மனமறிந்த, மக்கள் விரும்புகின்ற நடுநிலை வாதியாக வலம்வரும் கோதபாய ராஜபக்ஷ்வையே முழு நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு மருதானை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, ஸ்ரீல.பொ.பெ. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அடுத்த ஜனாதிபதி யார் என்பது பற்றி மக்களுக்கு தெளிவாகிவிட்டது. இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லை.
எமது கட்சிக்குள் எவருக்கும் மத்தியில் எந்தவித கருத்து முரண்பாடுகளும் கிடையாது. நாம் அனைவரும் ஐக்கியமாகச் செயற்பட்டு, ஒருமித்த அணியாகவே ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்க எதிர்பார்க்கின்றோம்.
கட்சியையும் பாதுகாத்து ஜனாதிபதித் தேர்தலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமெனில், அதற்குத் தகுதியான மிகவும் பொருத்தமான வேட்பாளர் கோதபாய ராஜபக்ஷ்வே ஆவார்.
மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான அனைத்துத் தரப்பினரும் கோதாபய மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் சிறந்த செயற்பாடுகள் மூலம் தன்னால் இதனை வெற்றி கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் நலனைக் கருத்திற்கொண்டு, மக்கள் பக்கம் நின்று இம்முறை பலதரப்பட்ட மக்கள் வாழ்வாதாரத் திட்டங்களை மேற்கொள்வதற்கும், அவர் தற்பொழுதிலிருந்தே திட சங்கற்ப உறுதி பூண்டுள்ளார்.
எனவே, "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோதபாயதான், எமது இலங்கையின் அடுத்த ஜனாதிபதி" என்ற கட்சி ஆதரவாளர்களின் கனவை நனவாக்குவதற்கு, இலங்கை வாழ் ஒட்டுமொத்த மக்களும் கோதாபய ராஜபக்ஷ்வுக்கு, தமது ஆதரவுகளையும் வாக்குகளையும் அள்ளி வழங்க முன்வர வேண்டும் என்றார்.