அஸ்லம் எஸ்.மௌலானா-
சீன நாட்டு நிறுவனமொன்றின் அனுசரணையுடன் கல்முனை மாநகரில் 2040 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நவீன நகர் அபிவிருத்தி திட்டங்களுக்கான வரைபினை துரிதமாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.யின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளையேற்று, இத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ள சீன நாட்டின் முன்னணி நிறுவனமொன்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கிறது.
இத்திட்டம் தொடர்பாக ஆராயும் நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் நேற்று கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சின் அமைச்சின் திட்டப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.கே.வீரகொட தலைமையிலான பொறியியலாளர் குழுவொன்று இக்கூட்டத்தில் பங்குபற்றி, மேற்படி திட்டத்திற்கான வரைவைத் தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது கல்முனை புதிய நகரத் திட்டத்திற்காக மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணத்துவ பேராசிரியர்களினாலும் நகர அபிவிருத்தி அதிகார சபையினாலும் தயாரிக்கப்பட்டுள்ள வரைபுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு, அவற்றிலுள்ள சில விடயங்களை புதிய வரைவுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2040 ஆம் ஆண்டளவில் கல்முனையானது நவீன வசதிகள் கொண்ட ஒரு நகராக எவ்வாறு அமைதல் வேண்டும் எனும் தூரநோக்கு அடிப்படையில் இத்திட்ட வரைவை தயாரிப்பதற்கான ஆலோசனைகள் இதன்போது பரிமாறப்பட்டன. இது தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி நடாத்துவது எனவும் அதற்கு முன்னதாக கல்முனையில் இயங்கும் தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டத்தில் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல், உயர் கல்வி அமைச்சின் திட்டப் பொறியியலாளர்களான எஸ்.ஏ.தம்பு, எஸ்.எச்.எம்.ஷாமில், கட்டிடங்கள் திணைக்களத்தின் மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர்களான எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல், எம்.சி.றியாஸ், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்திய காரியாலய திட்டமிடல் உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபையின் திட்டமிடல் பிரிவு தொழில்நுட்ப மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்திற்கான அமைச்சு மட்ட ஒருங்கிணைப்புப் பணிகளை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.