இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழ்நாட்டின் மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் தலைவருமான குணங்குடி ஆர்.எம்.ஹனீபா அவர்களை நுஜா ஊடக அமைப்பினர் இன்று இரவு கொழும்பு கலதாரி ஹோட்டலில் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நுஜா ஊடக அமைப்பின் பொருளாளரும், பிரபல எழுத்தாளருமான ஜூல்பிகா செரீப் தலைமையில் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கிழக்கை மையப்படுத்தி தேசிய ரீதியாக நுஜா ஊடக அமைப்பு கடந்த 17 வருடங்களாக சிறப்பாக இயங்கி வருவதையும், இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் எடுத்துக்கூறினர்.
நுஜா ஊடக அமைப்பின் பிரதிச் செயலாளரும், வசந்தம் தொலைக்காட்சியின் அறிவிப்பாளருமான கவிஞர் ஏ.எம்.அஸ்கர் மற்றும் செய்தி ஆசிரியரும் வானொலி அறிவிப்பாளரும்,கவிஞருமான றிஸ்லி சம்சாட், வசந்தம் ஊடகவியலாளர் மதன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பாளரும், சமூகத்தியாகியுமான குணங்குடி ஆர்.எம்.ஹனீபா அவர்கள் நுஜா ஊடக அமைப்பினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர் றிஸ்லி சம்சாட் தான் வெளியிட்ட "முகவரி " எனும் கவிதை நூலினை கையளித்ததுடன் சமூகத்தியாகி குணங்குடி ஆர்.எம்.ஹனீபா அவர்களிடம் இருந்து "வீரமிகு உலமாக்கள் "எனும் நூலினையும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.