தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி விதானகேவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையிலான சந்திப்பு இன்று (19) வியாழக்கிழமை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் இடம்பெற்றது.
அம்பாறை கரையோர பிரதேச மக்களின் நீண்ட காலமாக தேவையாக இருப்பதுடன் மக்கள் நேரடியாகவும் சமூக வலைத்தளத்தினூடாகவும் இக்காரியாலயத்தின் தேவை குறித்து கோரிக்கை விடுத்துள்ளமை பற்றியும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக மக்கள் அம்பாறைக்கு செல்வதால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் பற்றியும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்துக்கூறியதுடன் போக்குவரத்து மருத்துவ பிரிவு காரியாலயத்தினை கல்முனையில் திறப்பதற்கான கோரிக்கையினையும் இதன்போது விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், போக்குவரத்து மருத்துவ பிரிவு காரியாலயத்தினை கல்முனையில் திறப்பதற்கான நடவடிக்கையினை தான் மேற்கொள்வதாக இதன்போது உறுதியளித்துள்ளார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸூடன் றிப்தி முஹம்மட்டும் கலந்து கொண்டிருந்தார்.