மார்க்க ஒழுக்க விழுமியங்களுடன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த மர்ஹூம் எம்.எம்.எம். மர்சூக்


ஐ. ஏ. காதிர் கான்-
வ்வுலகில் வாய்மை நேர்மையுடன் வாழ்ந்த எம்.எம்.எம்.மர்சூக் ஹாஜியாரின் இறப்புச் செய்தி, பலநூறு பேருக்கு தாங்க முடியாத பேரதிர்ச்சியாக இருந்தது.
தன் அன்பான மனைவியையும், பாசமிக்க ஐந்து மக்களையும் விட்டுப்பிரிந்த அன்னார், எவ்வித தீய பழக்க வழக்கங்களையும் கொண்டிராது, மார்க்க ஒழுக்க விழுமியங்களுடன் இறுதி மூச்சு வரை வாழ நேர்ந்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு அளித்த பெறும் பேறு எனலாம். பாசத்தையும், நேசத்தையும் பிறவிக் குணமாகக் கொண்ட அன்னாரோடு, வஞ்சகமும் வெஞ்சினமும் ஒன்று சேர முடியாமல் தன் கூட்டுறவை முறித்து, ஆயுள் பகை கொண்டது எனக்கூறலாம். 78 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அன்னாரின் பிரிவு, எங்களுக்கு எந்நாளும் நீங்காத நினைவாக இருக்கின்றது.
அறுபது ஆண்டுகளுக்கு முன் "ஹமீதியா ஜெம் பெலஸ்" என்ற பெயரில் நகை வியாபாரத்தில், தன் அயராத முயற்சியுடன், தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அன்னாருக்கு வாய்மை, நேர்மை, நாணயம், நம்பிக்கை போன்ற உயர்ந்த குணங்கள் தொழில் ரீதியில் உயர்வடைவதற்கு உரமிட்டன எனக் குறிப்பிடலாம்.
"தேசபந்து", " "வியாபார விபூஷண" மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான் போன்ற சிறப்புமிக்க கெளரவ நாமங்கள், அன்னாருடைய ஆளுமைக்குக் கிடைத்த சிறந்த பரிசுகள்.
கொழும்பு - 09, தெமட்டகொடை, ஆராமய வீதியில், தன் சொந்த இருப்பிடத்தில் தனது காணியில் ஒரு பகுதியை வழங்கி, "மீராணிய்யா மஸ்ஜித்" மற்றும் மத்ரஸாவை உருவாக்கத் துணை புரிந்து, பன்னிரெண்டு ஆண்டுகளாக அவற்றின் உறுப்பினராக சேவை செய்தார். அதன்பின், சிறு கால இடை வேளைக்குப் பிறகு கொழும்பு - 11, டாம் வீதியில் அமைந்துள்ள "மஸ்ஜிதுல் ஹிதாயா" பள்ளிவாசல் தலைவராக பதினைந்து ஆண்டுகளாக, சக உறுப்பினர்களோடு, தோளோடு தோள் நின்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.
2019 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமையன்று இதே பள்ளிவாசலில் ழுஹர் தொழுகையையும் தனது இறுதி இறை வணக்கமாக நிறைவேற்றிக் கொள்ளும் பெரும் பாக்கியத்தைப் பெற்று, மதிய உணவுக்காக வீடு திரும்பிய சில நிமிடங்களில் மிக அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
தன் பொருட் செல்வத்தை தன் வீட்டோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாது, உற்றார் உறவினர்களுடன் நடை தளர்ந்தவர்களுடன், நல மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட விதம் அபாரம். இக்குடும்ப வட்டத்தில் வேறு எவராலும் நிரப்ப முடியாத ஒரு பெரும் இடை வெளியை, அன்னாரது பிரிவு ஏற்படுத்தி விட்டதென்றால் மிகையல்ல.
அவரது இறுதிச் சடங்கில், கொடு வெயிலின் கொடூரத்தையும் பாராது, பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மக்களின் காட்சி, இயற்கை எய்தியவர் தன் ஜீவிய காலத்தில் எவ்வாறு வாழ்ந்தார் என்பதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது.
இவ்வுலகிற்கு வந்தவர்கள் எல்லோரும் தங்கிவிட்டால், இம்மண்ணில் இடமில்லை என்பது யதார்த்தம். இருப்பினும், பாச நேசத்தால் எம்மோடு கட்டுண்டவர் எம்மை விட்டும் பிரியும்போது ஏற்படும் துயரத்தை ஜீரணித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல.
அன்னாரது மறுமை வாழ்வின் ஈடேற்றத்துக்காக பிரார்த்திப்போம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -