உலகில் கிடைத்தற்கரிய பிறவி மனிதப்பிறவி. பகுத்தறிவின் அடிப்படையில் ஏனைய உயிரினங்களிடையே வேறுபடுகின்றான். எனினும் மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய சக்தி அறநெறிக்கல்வியிடமே உண்டு.
இவ்வாறு காரைதீவில் இடம்பெற்ற அறநெறிவழாவில் உரையாற்றிய காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேசசெயலகமும் இணைந்து ஏற்பாடுசெய்த அறநெறிவிழா ஊர்வலத்துடன் நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு காரையடிப்பிள்ளையாhர் ஆலயத்தில் இடம்பெற்ற நந்திக்கொடியேற்றல் குத்துவிளக்கேற்றலைத்தொடர்ந்து ஆரம்பமான இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்ச்சி ஊர்வலம் ஒருகிலோமீற்றர் தூரம் கடந்து மகா விஸ்ணு ஆலயத்தைச்சென்றடைந்தது.
அங்கு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் அறநெறிவிழா ஆரம்பமானது.சிறப்பதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்ப ணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
அங்கு ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.தியாகராஜாக்குருக்களின் ஆசியுரையுடன் அறநெறிக்கொடிதினமும் அனுஸ்ட்டிக்கப்பட்டது.
பிரதேசசெயலாளர் ஜெகராஜன் மேலும் உரையாற்றுகையில்:
இலங்கையிலுள்ள 6லட்சம் இந்து சிறார்களில்; 2லட்சம்பேர் மட்டுமே அறநெறிபாடசாலைகளுக்குச்செல்கின்றனர். இது நல்ல சகுனமல்ல. இது மாற்றியமைக்கப்படவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கல்விக்கடைகள் மூடப்படவேண்டும். பரீட்சையையும் தொழிலையையும் மையமாகக்கொண்டு செயற்படும் சமகாலக்கல்வி ஒழுக்கமான மனிதனை உருவாக்கபோதுமானதல்ல. அறநெறிக்கல்விமட்டுமே வாழ்க்கைக்கான கல்வியை வழங்கும்.எனவே பெற்றோர்கள் இதில் கவனம்செலுத்தவேண்டும். என்றார்.
தவிசாளர் கே.ஜெயசிறில் உரையாற்றுகையில்:
இன்று எமது இந்த சமயஊர்வலம் நடக்கையில் போக்குவரத்துப்பொலிசார் இடைஞ்சலை ஏற்படுத்தியமை கண்டனத்துக்குரியது. இதனை அமைச்சர் மனோகணேசனிடம் தெரிவித்து மதசுதந்திரத்தை பேண வகைசெய்வேன்.என்றார்.
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உரையாற்றுகையில்:
முன்னையகாலத்தைவிட அறநெறிப்பாடசாலைகள் உயிர்ப்பாக இயங்கிவருகின்றன. அமைச்சர் மனோகணேசன் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மற்றும் அவர்தம் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
அதேவேளை அறநெறி ஆசிரியர்களை சமயபாடஆசிரியர்களாக நிரந்தரமாக உள்ளீர்க்கவேண்டும். அவர்களுக்கு மாதாந்தகொடுப்பனவு வழங்கும்பட்சத்தில் இதனைமேலும் வலுவூட்டமுடியும். என்றார்.
அம்பாறைமாவட்ட இந்துசமயகலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திதொகுத்தளித்தார்.