எதிர்வரும் ஒரு சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் சாத்தியங்கள் காணப்படும் இக்காலகட்டத்தில் பெரும்பான்மை கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு, பிரச்சாரக்கூட்டங்களை நடாத்தி தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இவ்வாறான சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்த்திலே மாத்திரம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும், முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லா, முஸ்லிம் சமூகம் சார்பில், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, மக்கள் அபிப்பிராயங்களைக் கேட்டு வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றிய தனது தீர்மானத்தினை முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், பெருந்தலைவர் அஷ்ரப் செய்யாத விடயத்தினை ஒரு போதும் செய்யக்கூடாதெனவும். தேசிய கட்சிகளுடன் பேசி முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை வென்றெடுப்பதே சாத்தியமான செயற்பாடு எனவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரப்பின் 19வது வருட நினைவு தினத்தையொட்டி, ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த, ”பெருந்தலைவர் நினைவேந்தல்” நிகழ்வு திங்கட்கிழமை (16) ஏறாவூர் வாவிக்கரை பூங்கா அருகில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகம் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை நிறுத்துவதனால், நாம் பேரம் பேசி, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனத்தெரிவித்து, அவர், ஒவ்வொரு ஊர்களிலும் கூட்டங்களை நடாத்தியும் வருகி்ன்றார். இந்த விடயம் தொடர்பில் நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் கூறினேன். முஸ்லிம் சமூகம் சார்பில் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதானால், இந்த நாட்டிலே உள்ள சகல முஸ்லிம் கட்சிகளுடனும், இதர கட்சிகளிலே உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதலில் கலந்துரையாட வேண்டும். அதன் பின்னர் ஒரே கூரையின் கீழ் அனைவரும் ஒன்றுபட்டு, தீர்க்கமான முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்றேன்.
அவ்வாறில்லாமல், மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் மாத்திரம் தனித்து நின்று, தனிநபராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதானால் எதனையும் சாதித்துவிட முடியாது. அதனால் எமது சமூகம் எவ்விதமான நன்மைகளையும் அடையப்போவதில்லை, இந்த செயற்பாடானது எமது சமூகத்திற்கு ஆபத்தாக முடிந்துவிடும். ஆகவே நிங்கள் சரியாக சிந்தித்து உங்களுடைய முடிவினை மீள் பரிசீலனை செய்துகொள்ளுங்கள். எமது சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பில் கவனத்திற்கொண்டு செயற்படுங்கள் எனவும் தெரிவித்தேன்.
குறிப்பாக மறைந்த மாமனிதர் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினை தன்னகத்தே வைத்துக்கொண்டு, இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களை சந்தித்திருக்கின்றார்கள். அதிகப்படியான வாக்குகளையும், மூவின மக்களின் ஆதரவினையும் வைத்துக்கொண்டிருந்தவர். அவர் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான முடிவுகளை எடுக்கவில்லை. பெருந்தலைவர் தேசிய அரசியலில் அவ்வாறான தவறுகளை செய்யவில்லை. அவர் இந்த நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் சக்தியாக இருக்கவே விரும்பினார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுபான்மை சமூகத்தினரை சிக்கலில் மாட்டுவதற்கு முனையவில்லை.
இன்று முஸ்லிம் சமூகத்தினுடைய பொருளாதாரம் நசுக்கப்பட்டு, கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடுவதானால் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் அதுமாத்திரமல்லாமல் அங்குள்ள முஸ்லிம் வர்த்தகர்களும் பாதிக்கப்படுவார்கள். எமது உடமைகள் சூறையாக்கப்படும். எமது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இவற்றை தெரிந்தும் நாம் தவறிழைக்க முடியாது. எனவே தமது முடிவினை மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் மீண்டுமொரு முறை பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன்.
முஸ்லிம் சமூகம் இந்த நாட்டிலே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு களைத்துப் போயுள்ள நிலையில், இன்னும் எமது சமூகத்தினுடைய காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அத்துடன் எமது மக்களுடைய உரிமைகள் வென்றெடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எமது அரசியல் நகர்வுகள் சரியாக இருக்க வேண்டும். அண்மைக்காலங்களில் அந்நிய சமூகத்திற்கு எதிராக நாம் பேசியவைகள் எமது மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. எனவே எமது கருத்துக்களும், அரசியல் நடவக்கைகளும் சமூகத்தின் நன்மைக்கானதாக இருக்க வேண்டும். மிகவும் அவதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் விடுகின்ற தவறுகள், எமது மண்ணுக்கு இடம்பெறுகின்ற அநியாயங்கள், பிழையான அரசியல் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது மறைந்த பெருந் தலைவின் பாசறைகள், அரசியல் நகர்வுகளை எமது அரசியல் தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நினைவுபடுத்தி சிறந்த அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு தலைவரின் பாசறையில் வளர்ந்த எல்லோருக்கும் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகச் செயலாளரும், பிரதித்தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி, தே.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் வைத்தியர் சியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.