அதிபர் சேவை நியமனத்தினால் அகில இலங்கை ரீதியாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று திங்கள் 23.09.2019 இல் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து, கடந்தவாரம் வழங்கப்பட்ட 1858 அதிபர் சேவை நியமனத்தில் முஸ்லிம்கள் 34 பேரும் தமிழர்கள் 133 பேருமாக தமிழ் மொழியில் மொத்தமாக 167 பேர் நியமனம் பெற, சிங்கள சமூகத்தில் எல்லாமாக 1690 பேர் நியமனம் பெற்றிருப்பது எங்களுக்கு அநீதியை இழைத்திருக்கிறது என முறையிட்டனர்.
இதனை முறையாக ஆராய்ந்து சரிகண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்ட பிரதிநிதிகள் குழுவை தன்னுடன் அழைத்துக்கொண்டு கல்வி அமைச்சின் செயலாளரின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று அதிபர் சேவை நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள அநீதிகளை கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
மேற்படி சந்திப்பில் செயலாளருடன் மேலதிக செயலாளர் மற்றும் அதிபர் கிளைப் பிரிவின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் உள்ளவாறு அதிபர் சேவை ஆட்சேர்ப்பானது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு தனித்தனியான முறையில் நடைபெற வேண்டும் என்பதாகும். இந்த விதிமுறை தற்போது நடைபெற்றுள்ள அதிபர் சேவை தரம் iii நியமனத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எடுத்துக் கூறினார். இதன் விளைவாகத்தான் தமிழ் மொழியில் மிகச் சொற்ப அளவான 167 பேர்கள் நியமனம் பெற்றிருக்கின்றனர் எனவும் நிரூபித்தார். எனவே அதிபர் சேவை தரம் iii ற்கான நியமனத்தினை பிரமாணக் குறிப்புக்கு அமைய தமிழ் மொழிரீதியாக தனியாக பட்டியிலிட்டு வழங்கினால் கணிசமானவர்கள் உள்வாங்கப்படுவார்கள் எனும் நியாயத்தினையும் வலியுறுத்தினார்.
மேலும் பரீட்சை புள்ளிகள் வெளியிடப்படாத நிலையில் இந்த நியமனப் பட்டியல் தயாரிக்கபட்டிருப்பதும் குறிப்பிட்ட நியமனம் தொடர்பான அதிர்ப்தியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புவிடுத்தார்.
அத்துடன் வர்த்தமாணி அறிவித்தலில் இலங்கை அதிபர் சேவை நியமனத்திற்கான வெற்றிடங்கள் 1918 என கூறப்பட்டிருந்த போதும் தற்போது 1958 நியமனத் தெரிவு மாத்திரம் நடைபெற்றதில் மீதி 60 வெற்றிடங்களின் நிலை என்ன? எனவும் அமைச்சரினால் வினாவப்பட்டது இதற்கு பதிலளித்த உரிய ஆட்சேர்ப்புக்கு பொறுப்பான அதிகாரி சமமான ஒரே புள்ளியில் 100 க்கும் அதிகமானவர்கள் இருப்பதனால் அந்த 60 பேரை தெரிவு செய்ய முடியாதுள்ளது எனக் கூறினார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் முறையீடுகளை உள்வாங்கிய செயலாளர் குறிப்பிட்ட விடயத்தில் தவறு நடந்திருப்பதாகவும் ஏற்றுக்கொண்டு நடைபெற்ற நியமனத் தெரிவுமுறை பற்றி பொறுப்பான அதிகாரியிடம் வினாவினார். அதற்கு அவர் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டதாக பதிலளித்ததும். அந்த நடைமுறை பிழையானது எனவும் அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் கூறப்பட்ட விதிமுறைதான் ஆட்சேர்ப்பில் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் எனவும் நியாயம் கட்பித்தார்.
சிங்கள மொழி அதிபர்களை எப்படியும் தமிழ் மொழி வெற்றிடங்களுக்கு நியமிக்க முடியாது அது அடிப்படை உரிமை மீறப்படும் விடயமாகும் எனவும் செயலாளர் உரிய அதிகாரிகளிடம் தெளிவாக பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக அதிபர் சேவை தரம் iii ற்கான முழு வெற்றிடங்களும் அடங்கலாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலமான வெற்றிடங்களையும் நிரட்படுத்தி தனக்கு வழங்குமாறு செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இதன்மூலம் தமிழ் மொழி மூலமான வெற்றிடங்கள் எத்தனை உள்ளது என்ற கணக்கெடுப்பு இல்லாமலே குறிப்பிட்ட நியமனம் செய்யப்பட்டுள்ளதையும் எம்மால் அறிய முடிகிறது. எனவே இதற்கான முடிவினை விரைவில் நாங்கள் மொழிரீதியான அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை அளித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் முழுவதுமாகவிருந்து கலந்துகொண்ட தமிழ் சமூகப் பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட விடயத்தில் உரிய தீர்வினை பெற்றுத்தருவதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்த சிரத்தை மிகவும் பெறுமதியான திருப்தியை அளித்ததாகவும் பிரச்சினைக்கு முறையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாகவும் நன்றி பாராட்டுதலை அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.