சஹ்ரான் கும்பலின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேவையானது மேலும் உணரப்பட்டிருக்கிறது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை முன்னிறுத்தி வெற்றியீட்டக்கூடிய வேட்பாளரையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஒழுங்கு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வு கட்சியின் கல்முனைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (16) கட்சியின் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;
"வடக்கு- கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தளவில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒன்றித்து வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, கல்முனைத் தொகுதியில் சட்டத்தரணி சம்சுதீனை வேட்பாளராக களமிறக்கி, கூட்டணியின் வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அதன் பின்னர் தமிழ் ஈழப்போர் இடம்பெற்ற முக்கியமானதொரு காலப்பகுதியில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்ததன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதில் இருந்து தடுக்கப்பட்டனர். அவரது வழிநடாத்தலில் முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாக்கப்பட்டனர். அக்காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான அரசியல் போராட்டத்தில் மர்ஹூம் அஷ்ரப், பாரிய உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தார். அதன் காரணமாக கல்முனையில் அமைந்திருந்த தனது அழகான வீட்டில் இருந்து அவர் அகதியாக வெளியேறியிருந்தார்.
முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை உத்தரவாதப்படுத்தும் நோக்கிலேயே எமது பெரும் தலைவர் முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை உருவாக்கியிருந்தார். அவரது தூரநோக்கு சிந்தனை காரணமாகவே பாராளுமன்றத் தேர்தலில் ஆசனம் பெறுவதற்கான வெட்டுப்புள்ளியை 12.5 வீதத்தில் இருந்து 05 வீதமாக குறைக்க முடிந்தது. இதற்காக 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை அவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் இது போன்ற சமூக ரீதியான பேரம் பேசல்களுடன் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளரையே எமது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
சஹ்ரானின் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய அச்சுறுத்தல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் சக்திவாய்ந்த அரசியல் கட்சியொன்று எம்மிடம் இருப்பதன் காரணமாகவே இவ்வாறான நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ள முடிந்திருக்கிறது. இப்படியொரு கட்சி எமது சமூகத்தில் இல்லையென்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டும்" என முதல்வர் றகீப் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.