இப்போது இருக்கும் மாணவர்களிடம் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக போகின்றீர்கள் என்று கேட்டால் எல்லோரும் பல்வகையான துறையை பெருமிதமாக கூறுவார்கள். ஆனால் யாரும் உலகுக்கு சோறு போடும் விவசாயியாக வரப்போகின்றேன் என கூறுவதில்லை. ஆனால் இன்னும் சில வருடங்களில் எல்லோரும் விவசாயியாக வரப்போகின்றேன் என கூறும் காலம் வரும் என்பது எனது நம்பிக்கை என அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.
சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் காரியாலயம் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான நாட்டுமேடை மற்றும் சேதனை பசளை சம்பந்தமாக விளக்கமளிக்கும் விரிவுரை இன்று (19) சாய்ந்தமருது விவசாய விஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது உரையில்
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் உணவு அவசியமாகிறது. அந்த உணவு எப்படி உருவாகிறது, அதனை உருவாக்க விவசாயிகள் படும் கஷ்டத்தை நாம் ஒரு கனம் நினைத்துப்பார்க்க வேண்டும். கொஞ்சநேரம் கூட வெயிலில் எம்மால் நிற்க முடியாதுள்ளது. ஆனால் விவசாயிகள் மூன்று நான்கு மாதங்கள் வெயிலில் கஷ்டப்படுகின்றார்கள். அவர்களின் கஷ்டம் எம்மால் எப்போதும் உணரப்படுவதில்லை. என்பது கவலையான விடயம்.
நூறு வருடங்கள் பழமையான விவசாய திணைக்களம் விவசாயிகளின் தேவைகளை அறிந்து அவற்றை தீர்த்துவைக்க பல முயற்சிகளை செய்துவருகிறது. பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் பல தீர்வுகளை நாங்கள் பெற்றுக்கொடுத்துள்ளோம். கிருமி நாசினிகள் இல்லாத உணவைத்தான் இந்த உலகம் விரும்புகிறது அதனால் வெளிநாடுகளில் இந்த துறைக்காக பல மில்லியன் ரூபாவை மாதாந்த சம்பளமாக வழங்கும் நிலை இருப்பது மாணவர்களை எதிர்காலத்தில் இந்த துறையின் பால் கவர்ச்சியை ஏற்படுத்தி ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.
சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற இந்நிகழ்வில் , உதவி விவசாய பணிப்பாளர் ஏ. அப்துல் மஜீத், மாவட்ட விவசாய வியாபார ஆலோசகர் எம்.எம்.எம். ஜெமீல், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களுக்கு குறித்த விடயம் தொடர்பில் செயன்முறை ரீதியான பயிற்சிகளை சாய்ந்தமருது நிலைய பொறுப்பதிகாரியும் விவசாய போதனாசிரியருமான ஏ.எல்.எம். சமீம், போதனாசிரியர் செய்னுலாப்தின் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் விவசாயிகளினால் உருவாக்கப்பட்ட இயற்கை பசளை பாடசாலை தோட்டத்துக்காக வழங்கி வைக்கப்பட்டது.