ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் எரிக் லவெர்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று வியாழக்கிழமை (3) அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
நீர் வழங்கல், கழிவு நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பிரான்ஸ் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி குறிப்பிட்ட அந்நாட்டு தூதுவர் நவீனமயமாக்கல் பற்றியும் நிபுணத்துவத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் தெரிவித்தார்.
இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் நீர் முகாமைத்துவம், நீரியல் தொடர்பான பாடநெறிகளின் ஊடாக பிரான்ஸ் நாட்டு மாணவர்களும் நன்மையடைவதற்கான வழிவகைகள் பற்றியும் பேசப்பட்டது.
பிரான்ஸ் நாட்டு அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் நீர்கொழும்பு, காலி உனவட்டுன, களனி பேலியகொட, யாழ்ப்பாணம், அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் கழிவுநீர், முகாமைத்துவ செயற்திட்டங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் ஹேர்வே சர்னலியும் கலந்துகொண்டனர்.