உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களுக்கான “நற்சுகாதார முறையிலான உணவு உற்பத்தி செயற்பாடுகள்” தொடர்பான செயலமர்வு!
சலீம் றமீஸ் , எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் உயிர்முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்திலுள்ள உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களுக்கான “நற்சுகாதார முறையிலான உணவு உற்பத்தி செயற்பாடுகள்” தொடர்பான செயலமர்வு இம்மாதம் 04 ஆந் திகதி தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜே.முகம்மட் தாரிக் தலைமையில் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக உயிர்முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவின் தலைவர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் “உணவின் பாதுகாப்பும் அதன் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய அதிகாரி முகம்மட் இஸ்மாயில் அவர்களும் “பல்கலைக்கழகத்தின் சமூகத்திற்கான பங்களிப்பு” எனும் தலைப்பில் பீடாதிபதி கலாநிதி முகம்மட் தாரீக் அவர்களும் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கவுள்ளனர்.
இப்பிரதேசத்தில் சிறு கைத்தொழில் மூலம் உள்ளூர் உணவு உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு இச் செயலமர்வு அவர்களின் உற்பத்தி செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இச்செயலமர்வு முற்றிலும் இலவசமாக நடாத்தப்படுவதுடன், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில்,பாலமுனை,கரைதீவு,சம்மாந்துறை,திருக்கோவில், தம்பிலுவில் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக வும்கலாநிதி அப்துல் மஜீட் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு 0773121350 (கலாநிதி அப்துல் மஜீட் ) என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.