கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவு வகைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு உணவுக் கட்டுப்பாடு அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற சுகாதாரத்துறை விசேட கூட்டத்தின்போது இவ்வதிகார சபையின் அவசியம் குறித்தும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை தெற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்வின், கல்முனை வடக்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஷ்வரன், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் ஆகியோர் உட்பட இம்மூன்று வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாடு அதிகார சபை ஊடாக இப்பிரதேசங்களில் அமைந்துள்ள உணவகங்களினதும் உணவு வகைகளினதும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்றும் மாதம் ஒரு முறை இந்த சபை கூடி, அதன் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வது என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 21ஆம் திகதி கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து உணவகங்களினதும் உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல் மற்றும் விழிப்புணர்வு கூட்டமொன்றை நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிறகு இப்பிரதேசங்களில் இயங்கி வருகின்ற உணவகங்களின் சுகாதார நடைமுறைகளை கடுமையாக அமுல்படுத்துவது என்றும் மீறி செயற்படுகின்ற உணவகங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைளை முன்னெடுப்பது என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.