முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் மீது நடந்து கொண்ட முறையற்ற சம்பவம் முதல் கடந்த அரசில் முஸ்லிங்களுக்கு எதிராக செய்த சகல முறையற்ற அரசியல் முன்னெடுப்பு தொடர்பிலும் முஸ்லிம் சமூகத்திடம் முன்னாள் சமூக நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் மன்னிப்பு கோர வேண்டும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
கடந்த வாரம் தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா , மனோ கணேசன் ஆகியோர்களுக்கிடையிலான கருத்து பரிமாற்றத்தின் போது நடைபெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் இழப்பிட்டுக்கான ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் தமது பக்க உரையாடல்களை தொடர்ந்துகொ திருந்த போது திடீரென எழுந்த மனோகணேசன் அவர்கள் ஆவேசப்பட்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீது தண்ணீரை வீசினார். "தோட்டகாட்டான்" எனும் சொல்லாடல் மலையகத்தை சேர்ந்த இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் தொன்று தொட்டு பாவித்து வரும் சாதாரண சொல்லாடல்.
அன்று அந்த ஊடகத்தில் நடைபெற்றது திட்டமிடமிடப்பட்டவகையில் செய்யப்பட்ட ஒன்றாகும். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பேசுவதற்க்கு இடையூறு செய்துகொண்டே வந்த குறித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இறுதியில் அதை தெளிவாக வெளிக்காட்டினார்.
கடந்த அரசில் முஸ்லிங்களை இலக்கு வைத்து பல முன்னெடுப்புக்களை செய்துவந்த மனோ கணேசன் அவர்கள் வழக்கமாக மக்களின் பாவனையில் இருந்து வந்த சொல்லை பூதாகரமாக்கி அரசியல் ஆதாயம் தேடும் பணியையே அங்கு செய்தார்.
வழமையாக மக்கள் கண்டியான், கொழும்பான், யாழ்பாணி, சோனி, சிங்களவன் என்பதுபோல அதுவும் ஒன்று. ஓரிடத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும் போது வெள்ளம் என்றும் அது படர்ந்து இருந்தால் வெள்ளகாடு என்றும் அழைப்பது போன்று தோட்டப்பரப்பு காடு போன்று விரிந்து இருந்தமையால் தோட்டக்காடு என்று அன்று முதல் இன்றுவரை இலக்கியங்களிலும், பேச்சிலும் இருந்து வருகிறது. அது இழி சொல்லாக இருந்திருந்தால் கடந்த அரசில் அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்தபோது மனோ கணேசன் அவர்கள் அதை தடைசெய்திருக்க வேண்டும்.
கடந்த அரசில் அமைச்சராக இருந்து கொண்டு மனோ கணேசன் அவர்கள் முஸ்லிங்களை நிந்திக்கும் எத்தனையோ வேலைத்திட்டங்களை செய்திருக்கிறார், எத்தனையோ சொல்லாடல்களை பயன்படுத்தியும் உள்ளார். அவை அடங்களாக முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களிடமும் பொதுவெளியில் நாகரிகமற்ற முறையில் நடந்துள்ளார்.
"தோட்டகாட்டான்" எனும் சொல்லாடல் மலையக மக்களின் கௌரவத்திற்க்கு பங்கம் விளைவிப்பதாக கருதினால் திரு.மனோகணேசன் அவர்களின் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சியும் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இனிவரும் காலங்களில் எங்கும் அந்த சொல்லை பயன்படுத்த கூடாது எனும் பிரகடனத்தை முன்மொழிய வேண்டும்.
ஆகவே முன்னாள் அமைச்சர் திரு மனோகணேசன் அவர்கள் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாங்கள் தெரிவிக்க விரும்புகிறேன். என்றார்.