கிழக்கு மாகாணத்தில் கல்முனைப்பிராந்தியத்துக்குட்பட்ட காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கான செப்ரம்பர் மாத மேலதிக நேரக்கொடுப்பனவு வெட்டப்பட்டுள்ளதாக ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நான்கு வைத்தியஅதிகாரிகள் பல்வைத்தியஅதிகாரி தாதியர்கள் உள்ளிட்ட 46ஊழியர்களுக்கு இக்கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எ.அலாவுதீன் சடுதியாக விஜயம்செய்தபோது அங்குள்ள மருந்துப்பொருட்கள் வைக்கும் களஞ்சியசாலை தொடர்பாக திருப்தியீனம் தெரிவித்து ஒரு நாள் மேலதிக நேரக்கொடுப்பனவை வெட்டவேண்டிவரும் என்று கூறிச்சென்றிருந்தாகவும் ஆனால் ஒரு மாதத்திற்குரிய மேலதிகநேரக்கொடுப்பனவை கணக்காளர் வெட்டியுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது வேண்டுமென்றே திட்டமிட்டுச்செய்யப்பட்டுள்ளதாகவும் நாம் பணியாற்றிய கொடுப்பனவையே நாம் எதிர்பார்க்கின்றோமே தவிர கணக்காளருடைய பணத்தை அல்ல என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.
வைத்தியசாலையின் பொறுப்புவைத்தியஅதிகாரிடாக்டர் ஜீவா சிவசுப்பிமணியத்திடம் கேட்டபோது மேலதிகநேரக்கொடுப்பனவு வெட்டப்பட்டது உண்மை என்றார்.
இது தொடர்பில் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணனிடம் கேட்டபோது அப்பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்களுக்கான காசோலை வழங்கப்படவுள்ளது என்றும் கூறினார்.