மொட்டு அணியின் வெற்றியானது ஏதோ முஸ்லிம் சமூகத்தின் தோல்வி என்கின்ற அருட்டலான மாயையை உருவாக்க சில மொட்டு அபிமானிகளும் மொட்டு அணியின் ஏஜன்டுகளான அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ், பசீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரும் அவர்களின் எடுபுடிகளும் நிறுவ முயற்சி செய்து வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோரின் பிழையான தீர்மானமே இதற்க்கு காரணம் என்கின்ற பரப்புரைகளை செய்வதில் இவர்கள் பிரயத்தனம் எடுக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களாக ஹக்கீம் தலைமையில்- ரிசாட் அணியினர் உட்பட ஒட்டுமொத்த ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அண்மை காலத்தில் ஏற்பட்ட சிக்கலான நிலையிலிருந்து இந்த சமூகத்தை சமயோசிதமாக காப்பாற்றிய போது இவர்களை ஒஹோ என்று போற்றிப் புகழ்ந்த அதே நரிகள்தான் இப்போது இந்த தலைமைகளை விமர்சிக்கின்றனர்.
அடித்தவன் காலில் விழுவதனால் மீண்டும் அடிவிழாது என்ற சரணாகதி புத்தியை சிலர் தமது சொந்த இலாபத்திற்காக கையாள்வது மிகத்தெளிவான உண்மையாகும். மக்கள் மன்றத்தில் புறக்கணிக்கப்பட்டு அதிகாரமிழந்து அரசியல் அனாதைகளாக வலம் வரும் இந்த பிரதகிரிதிகள் நாங்கள் தான் முஸ்லிம் சமூகத்தின் ஏக முகவர்கள் என்று கட்டமைத்து காட்ட முயற்சித்து படுதோல்வி அடைந்துள்ளார்கள்.
இப்போது தேசியப்பட்டியல் கிடைக்காதா அல்லது ஆளுநர் கிடைக்காதா அல்லது நிறுவன தலைமை கிடைக்காதா அல்லது இடையில் ஏதாவதொன்று கிடைக்காதா என்று தூதுவிட்டும் நேரடியாக கேட்டும் ஒன்றும் கிடைக்காத கையறு நிலையில் எப்படியும் ஏதாவது ஒன்று கிடைக்கும் என்கின்ற கடைசி சொட்டு நம்பிக்கையோடு விட்டத்தை பார்த்து கொட்டாவி விடுகின்றனர்.
அவசரப்புத்தியில் அடிப்படை விளங்காமல் ஹக்கீம் -ரிசாட் அமைச்சுப்பதவியை துறக்க வேண்டும் என கோசமிட்டார்கள் சில எடுபிடிகள். ஒரு அமைச்சரவையின் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யும் போது அவருக்கு கீழே உள்ள அனைத்து அமைச்சுகளினதும் அமைச்சர்களினதும் பதவி தானாக இல்லாமலாகிவிடும். எனவே தோல்வியை ஒப்புக்கொண்ட தரப்பின் பிரதானி கூட்டாக இந்த இராஜினாமாவை மேற்கொள்வார். அதுதான் நடந்து இதற்கிடையில் சிலர் முன்னரே தமது பதவிகளை இராஜினாமா செய்தனர் அது அவர்களது தனிப்பட்ட விருப்பமாகும். எனவே எதற்கெடுத்தாலும் கொதிநிலையில் இயங்கும் விமர்சகர்கள் கொஞ்சம் நிதானமாக செயற்பட வேண்டும்.
புதிய ஜனாதிபதி இந்த நாட்டின் எல்லா இனமக்களுக்குமான ஜனாதிபதி. அது அவருக்கு வாக்களித்தவனுக்கும், வாக்களிக்காதவனுக்கும் .அவர்தான் ஜனாதிபதி.
இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முஸ்லிம் சமூகம் தமது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். தமக்கான ஜனநாயக உரிமையை கச்சிதமாக கையாண்டு உள்ளனர். அது இன்றைய ஆளும் தரப்புக்கு மிகத்தெளிவான செய்தியினை சொல்லியுள்ளது. அதுதான் சிறுபான்மை சமூகம் உங்களை நம்பவில்லை என்ற அழுத்தமான செய்தியாகும். இனவாத பரப்புரைகளை கொண்டு ஆட்சி பீடம் கைப்பற்றப்பட்டாலும் ஆட்சியை காப்பாற்ற இதே இனவாத செயற்பாட்டை ஆளும்தரப்பால் தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாது. என்பதனை ஆளும் தரப்பின் முக்கிய புள்ளிகள் அறிவார்கள். அத்தோடு சிறுபான்மை சமூகத்திற்கும் மொட்டு அணியினருக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கின்ற விடயத்தில் அவதானம் செலுத்துவார்களே தவிர மக்கள் செல்வாக்கற்ற தோற்றுப்போனவர்களில் அவர்கள் ஒருபோதும் தங்கியிருக்க மாட்டார்கள்.
ஆயிரம் விமர்சித்தாலும் ஹக்கீம்-ரிசாட் இருவரும் மக்கள் மன்றத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் மிக்கவர்கள். அவர்களின் தீர்மானம் பெரும்பான்மை சமூகத்தின் தீர்மானத்திற்கு சமாந்திரமானதாக இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியிலிருந்து நாம் விலகியே சிந்திக்க வேண்டும். காரணம் தேசிய அரசியலின் போக்கிலிருந்து மாறுபட்ட பிரச்சினைகளும், தேவைப்பாடுகளும் நமக்கிருக்கின்றன. அவற்றை சுற்றிய சிந்தைக்கூடான தீர்மானமாகவே இவர்களது தீர்மானம் இருக்கும். ஆனால் எவ்வளவு அடித்தாலும் அடிமை போல ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்மொழிகின்ற சிலர் கிடைத்த இடைவெளியில் நாமும் உள்ளே நுழைந்து அரசியலில் ஒரு சுற்று வரலாம் என்ற நப்பாசையில் ஹக்கீம்- ரிசாட் தரப்பினை விமர்சனம் செய்கின்றனர். இவர்கள் வெறும் நெத்தலிகள் சல்லி காசுக்கு பெறுமானமற்ற ஒரு நூறு வாக்குகளையாவது திரட்டிக்கொள்ள முடியாத பாவப்பட்ட ஜீவன்கள். புதிய ஜனாதிபதியோ, பிரதமரோ இவர்களை கண்டு கொள்ளவில்லை என்பது இவர்களது புலம்பல்கள் புலப்படுத்துகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வின் ஒரு வார கால நடவடிக்கைகளை நோக்கும் போது மிகநீண்ட தொலைதூர பயணமொன்றுக்கான அடித்தளத்தை மிக அவதானமாக, நிதானமாக இடுவது புரிகிறது. இறைவன் நாடினால் இனவாதமற்ற, மதவாமற்ற ஒரு சமாதான இலங்கையை அவரால் உருவாக்க முடியும். அப்படி நடக்கின்ற போது மூன்று இனமக்களையும் சமமாக நடத்துகின்ற ஒரு நிலை உருவாகலாம். அவரது எதிர்கால செயற்பாடுகள் அதனை நமக்கு உணர்த்தும்.
சகல சமூகங்களையும் அரவணைத்து முன்னர் விட்ட பிழைகளை திருத்திய ஒரு ஆட்சியை சிறுபான்மையினரும் பெரிதும் விரும்புவர். இதன்போது மக்கள் மன்றத்தில் தோற்றுப்போன சில்லரைகளின் சலசலப்பு எடுபடாது மாறாக முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொண்ட ஹக்கீமும் -ரிசாட்டும் அங்கே வீற்றிருப்பார்கள். அப்போதும் இப்போது போலவே தோற்றுப்போனவர்களின் அவலக்குரல் எழத்தான் செய்யும்.
அத்தோடு ஹக்கீமையும்- ரிசாட்டையும் விமர்சிக்கின்ற நபர்களை அல்லது அவர்களது பின்புலத்தை நோக்கினால் அங்கே சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டவர்களை நாம் இனங்காணலலாம். இவர்களது நோக்கம் ஹக்கீமை விமர்சிப்பதன் மூலம் எதிரணியினரிடம் நல்ல பெயரையும் இன்னும் ஏதாவது ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாகும்.
ஆனால் இந்த தோற்றுப்போனவர்கள் செல்லாக்காசுகள் என்று ஆளும் தரப்பு தெளிவாக தெரிந்து வைத்துள்ளது. அதுதான் நேற்று வந்த முசம்மில் ஹாஜியாருக்கு ஆளுநர் பதவி கொடுத்த போதும் இவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை.
தமிழ்-முஸ்லிம் அரசியல் தளமான இன்னொரு முனையை நோக்கி நகர்ந்துள்ளது. அதனை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டியது இந்தத்தலைமைகளின் கடமையாகும். வலுவான ஒரு எதிர்கட்சியை அமைப்பதில் இவ்விரு சமூகத்தையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிதும் முக்கிய பொறுப்பாகும். அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை விமர்சிக்கின்ற மாமூலான அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து விடுபட்டு அரசின் நல்ல திட்டங்களுக்கும், மக்கள் நலப்பணிக்கும் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
எதிர்கட்சி அரசியலின் மூலம் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை நெஞ்சுரத்துடன் தடுப்பதோடு, தமிழ் முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவி காணப்படும் முரண்பாடுகளை களைவதற்கு இந்த கால அவகாசத்தை பயன்படுத்த வேண்டும். நம்பிக்கையோடு இருப்போம் "நாளை நமதே"