தலைநகர் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் வருகிற 22-ந்தேதி பா.ஜனதா சார்பில் பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிலையில் பேரணியில் பங்கேற்கும் மோடியை பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுத குழுக்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இது தொடர்பாக சிறப்பு பாதுகாப்பு குழுவினருக்கும், டெல்லி போலீசாருக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அதில், “ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பேரணியின்போது திரளும் கூட்டத்தை பயன்படுத்தி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியை தாக்க முயற்சிக்க கூடும்.
எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு பயங்கரவாதிகள் குறி வைத்திருக்கும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.