கடந்த மூன்று வருடங்களில் சுமார் 1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம், 29 நாடுகளில் பணியாற்றிய 1043 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு காரணங்களினாலேயே இந்த உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. 2019 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை 194 பேர் தமது பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது உயிரிழந்தனர்.
இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், குறைந்த உயிரிழப்புக்களாகும். 2018 ஆம் ஆண்டு இந்த இறப்பு வீதத்தின் தொகை 239 ஆக இருந்தது.
இதன்படி, 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சவூதி அரேபியாயில் 362 பேரும், குவைத்தில் 214 பேரும், கட்டாரில் 133 பேரும், தென்கொரியாவில் 32 பேரும் உயிரிழந்தனர்.
இதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கைக்கு 7 பில்லியன் டொலர்களை, நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது மொத்த தேசிய வருமானத்தில் 7 வீதமாகும் என்றும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.