காரைதீவு சகா-
காரைதீவுப்பிரதேசத்தில் கடந்த 37 நாட்களில் 39 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட காரைதீவுப்பிரதேசம் அண்மைய மழை வெள்ளத்தினால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.
கடந்த நொவம்பர் மாதத்தில் மட்டும் 28பேர் டெங்கு நோய்க்கு இலக்காகியுள்ளதாக களத்தில்நிற்கும் பொதுச்சுகாதார பரிசோதகர்களான எம்.எ.றாசிக் மற்றும் சா.வேல்முருகு ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
39பேர் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸண்பிள்ளை ஜெயசிறில் நேற்று அவசரமாக பொதுச்சுகாதார பரிசோதகர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடலை நடாத்தி உடனடியாக புகைவிசிறும் பணியை ஆரம்பிக்குமாறும் அதற்குத்தேவையான எரிபொருளை தாம் வழங்குவதாகவும் கூறி உற்சாகப்படுத்தினார்.
டெங்கு நோய் தாக்கி யாரையாவது அழிக்கமுன் நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக பொதுஅமைப்புகள் சுகாதாரத்துறைக்கு தாராளமாக உதவவேண்டும். இது உயிருக்கான போராட்டம். பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களின் பணிகளைப்பாராட்டுகிறேன் என்று தவிசாளர் கூறி பணியைத்தொடங்குமாறு கூறினார்.
அவர்களும் (13) வெள்ளிக்கிழமை காரைதீவு 5, 6,11, 12 இராணுவமுகாம் போன்ற பகுதிகளில் புகைவிசிறும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டனர்.
களத்தில் நிற்கும் பொதுச்சுகாதார பரிசோதகர்களான எம்.எ.றாசிக் மற்றும் சாமித்தம்பி வேல்முருகு கூறுகையில் முதலெலாம் மண்ணெண்ணெய் பாவிப்பது வழங்கம். ஆனால் தற்போது புகை அதிகம் தேவையென்பதால் டீசல் மற்றும் பெஸ்கார்ட்ட என்ற இரசானயக்கொல்லியும் பாவிக்கிறோம். மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஆனால் சுற்றுச்சுழலைப்பாதுகாக்கவேண்டியது அவர்கள்தான். அவர்களது ஒத்துழைப்பு மட்டுமே டெங்கை தடுக்கமுடியும் என்றனர்.