தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வட்டகொடை யோக்ஸ்போட் தோட்டம் மணிபூர் பிரிவில் 7 வீடுகள் கொண்ட 8ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் 08.12.2018 அன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.
இந்த இரு வீடுகளிலும் இருந்த 09 பேர் தற்காலிகமாக யோக்ஸ்போட் கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமியின் ஊடாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கொட்டகலை பிரதேச சபையினரும் மேற்கொண்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.