மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து 9 வௌிநாட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த கயான் குறிப்பிட்டுள்ளார்.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், மிரிஹான தடுப்பு முகாமில் நேற்று முன் தினம் திடீரென முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 75 கையடக்கத் தொலைபேசிகளும் 5 மடிக்கணினிகளும் 1,56,000 ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றிவளைப்பின் போது, தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களின் பெயர்ப்பட்டியலைச் சோதனையிட்ட போது 9 வௌிநாட்டவர்கள் காணாமற்போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த 9 பேரும் நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இதேவேளை, தடுப்பு முகாமில் இருந்த 8 வௌிநாட்டவர்கள் நேற்றுக் காலை நாட்டில் இருந்து வௌியேற்றப்பட்டதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த கயான் குறிப்பிட்டுள்ளார்.
மிரிஹான தடுப்பு முகாமில் தற்போது 111 வௌிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.