கட்சியினதும், கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பினதும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் முன்னாள் கல்முனை பிரதேச சபைத் தவிசாளர் பள்ளிக்காக்கா என்றழைக்கப்படும் மர்ஹூம் ஏ.எம்.சாகுல் ஹமீத் அன்னாரின் மரணச் செய்தி கேட்டு கவலையடைகின்றேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் அச்செய்தியில் குறிப்பிடுகையில்
மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்போடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தலைவருடன் கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்.
மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயற்பட்டதனால் தலைவர் அஷ்ரஃப் நம்பிக்கை நட்சத்திரம் சாகுல் ஹமீத் காக்கா என்னும் பெயர் சூட்டி கௌரவித்தார்.
கட்சிக்காக தன்மை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டதுடன் கட்சிக்கு விசுவாசமாகவும் செயற்பட்டார். இவ்வாறு செயற்பட்ட அன்னாருக்கு கல்முனை பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடம் ஏற்படுகின்ற போது கட்சியில் பலர் இபபதவிக்கு தகுதியானவர்கள் இருந்தும், மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தவிசாளர் பதவியினை பள்ளிக்காக்காவுக்கு வழங்கி அவரை கௌரவித்தார்.
தனக்கு வழங்கிய தவிசாளர் பதவியினைக் கொண்டு கல்முனை பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து ஊர்களுக்கும் சிறந்த சேவையினை செவ்வனே செய்தவர்.
நான் போட்டியிட்ட தேர்தல்களில் எனது வெற்றிக்காக முழு மனதோடு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கிய அரசியல் முதிசம்.
கல்முனை விவகாரம், கல்முனை அபிவிருத்தி போன்ற விடயங்களில் அவருடைய இறுதி மூச்சு வரை எனக்கு பக்க பலமாக செயற்பட்டவர்.
கட்சியின் இணைத்தலைமைத்துவ பிரச்சினையில் கூட தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக போராட்டக் களத்தில் என்னோடு சரி நிகராக நின்று பிடித்தவர்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.