வலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் ஈ.பி.டி.பி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்


லிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை 13.12.2019 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத்திட்டம் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் கடந்த விசேட கூட்டத்தின் மூலம் அவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு வரவு உரையாற்றப்பட்டது.
வரவு செலவுத்திட்டத்தினை அவைக்குச் சமர்ப்பித்த தவிசாளா,; கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றியதுடன் எதிர்வரும் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார்.

நிலைபேறான அபிவிருத்தியாக கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு ஜனநாயகப் பண்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இவ் வரவு செலவுத்திட்டத்தினை சகலரும் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் முன்னெடுத்த அபிவிருத்திகள் தொடர்பான விமர்சனங்களையும் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டங்களில் காணப்படும் விடயங்கள் தொடர்பாகவும் உறுப்பினர்களால் தவிசாளரை நோக்கி கேள்விக்கணைகள் தொடுத்து உரைகள் அமைந்தன. அக்கேள்விகளுக்கு பதிலளித்த தவிசாளா,; தொடர்ந்து உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள நல்ல விடயங்களை எமது சபை நடவடிக்கையில் உள்வாங்கிக்கொள்வதில் இச் சபையின் காத்திரம் அதிகரிக்கும் என்பதில் அதீத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆகவே சகலரும் ஐக்கியத்தினை வெளிப்படுத்தி சபையினை முன்கொண்டு செல்வது காலத்தின் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

உறுப்பினர்களின் உரைகளைத் தொடர்ந்து சபையின் திருத்தங்களுடன் அபிப்பிராயத்திற்காக வரவு செலவுத்திட்டம் வைக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (13.12.2019) சபைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது நீண்ட விவாதங்கள் நடைபெற்றன. சபையின் முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்றத் தண்டப் பணம் மாகாணம் தழுவிய ரீதியில் எதிர்வரும் ஆண்டின் உண்மை வருமானமாக பதிவளிப்பதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டதனால் கடந்த முறை குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதை உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். தற்போது கிடைக்கப்பெற்றிருக்கின்ற பணத்தினை வட்டாரங்களுக்கு வெளியே பொதுவான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என யோசனை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டபோது அக் கருத்திற்கும் சில உறுப்பினர்களால் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தவிசாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சார்பாக நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டின. இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பினருக்கு என தான் சலுகை அளிக்கவில்லை என தவிசாளரினால் பதிலளிக்கப்பட்டு காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்களைத் தொடர்ந்து தவிசாளரினால் வரவு செலவுத்திட்டத்திற்கான இறுதி அவை அனுமதி கோரப்பட்ட போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் வாக்கெடுப்பினைக் கோரினர். சபையில் பிரசன்னமாகியிருந்த கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சுயேட்சைக்குழு மற்றும் சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் தாம் வரவு செலவுத்திட்டத்தினை ஏற்றக்கொள்வதாக ஆதரவு தெரிவித்தனர்.


அவ்வகையில் 38 சபை உறுப்பினர்களில் சபையில் சபை அமர்வுகளுக்கு பிரசன்னமாயிருந்த 31 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்றினர்.
வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உரையாற்றிய சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் நிறைவேற்றப்பட்டமைக்காக நன்றிகளைத் தெரிவிப்பதுடன் சகலரினதும் திட்டங்களுடனும் மேற்கொள்ளப்பட்ட இவ் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்படாமையினையிட்டு தான் கவலையடைவதாகவும் தெரிவித்தார்.

இவ் வரவு செலவுத்திட்ட வருமானத்தில், அரசிறை மானியமாக 72,547,860 ரூபாவும் சபையின் வருமானங்களாக 102,387,350 ரூபாவும் மூலதன நன்கொடைகளாக 12,000,000 ரூபாவுமாக மொத்த வருமானம் 186,935,210 ரூபாவாகவும் உள்ளன.
செலவின விபரத்தில் மீண்டு வரும் செலவு 113,519,060 ரூபாவும் சபை நிதியிருந்தான மூலதனச் செலவாக 61,410,000 ரூபாவும் நன்கொடைகள் வாயிலான மூலதனச் செலவாக 12,000,000 ரூபாவும் உள்ளடங்களாக மொத்தச் செலவினம் 186,929,060 ரூபாவும் உள்ளன. வரவு செலவுத்திட்டத்தின் மிகை ஒதுக்கமாக 6,150 ரூபாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -