இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் 26 டிசம்பர் 2004 ஆம் திகதி மறக்கமுடியாத ஒரு நாள். உலக சமுதாயத்தை உறையவைத்த சுனாமி(TSUNAMI) எனும் ஆழிப்பேரலை தன்கைவரிசையைக்காட்டிய நாள்.
15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ருத்ர தாண்டவம் ஆடிய சுனாமி எனும் ஊழிக்கால ஆழிப்பேரலையை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.
அதுவரைஇ துள்ளிக்குதித்து வரும் கடல் அலையையும், கரையோடு மோதும் போது எழும் ஓசையையும் ரசித்து வந்த நமக்கு, கடல் அலையும் ஒரு நாள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாள் தான் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26.
மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்டால் சுனாமிப் பேரலையின் ஞாபகங்களும் அதனைத் தொடரும் அதிர்வலைகளும் கடந்த ஒன்றரை தசாப்த காலமாக இலங்கையில் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
இத்தகைய மிகவும் கொடுரதாண்டவமாடிய சுனாமியை நினைவுகூர்ந்து இலங்கை அரசாங்கம் டிசம்பர் 26ஆம் தினத்தை சுனாமி நினைவு தினமாக பிரகடனப்படுத்தினர். அன்றையதினம் கரையோரமெங்கும் சுனாமி தின வைபவங்கள் பொதுஅமைப்புகளால் நடாத்தப்பட்டுவருகின்றன. இப்போதும் கரை யோரம்பூராக அத்தினத்தில் 'ஓ' என்று அழுதுபுலம்புவோரைக்காணலாம். அதாவது இன்னும் அதன் தாக்கம் அவர்களைவிட்டுஅகலவில்லையென்பதே அதன் அர்த்தம்.
இன்றைய சுனாமிதின நினைவு நிகழ்வுகள் பரவலாக நடைபெறுகின்றன.
எனினும் 2004இற்கு பிறகு பிறந்த இன்றைய சிறுவர்சிறுமிகளுக்கு சுனாமி என்றால் என்னவென்று தெரியாது சூறாவளி என்றால் தெரியாது. எனினும் இத்தகைய பதிவுகள் அவர்களை ஓரளவாவது அறியச்செய்யலாம்.
அன்று காலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டு அதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை விஸ்வரூபம் எடுத்து பயங்கர வேகத்துடன் கடலோர நகரம் கிராமம் என்று வித்தியாசம் பாராமல் உள்ளே புகுந்தது.
உலகில் சுமார்இரண்டரை லட்சம் பேர் இச்சுனாமிக்குப்பலியாகினர். எனினும் அதிகூடிய சுமார் 2லட்சம் பேர் பலியானது இந்தோனேசியாவில் என்பதை ஞாபகத்தில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.அதற்கடுத்ததாகவே இலங்கையில் 40ஆயிரம் பேரும்இந்தியாவில் 23ஆயிரம் பேரும் தாய்லாந்திலே 5ஆயிரம் பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனாமி பேரலையின் இரைச்சல் பாரிய வெடிச்சத்தங்கள் போன்று ஓங்கிஒலிக்கும். அதேகணம் ஊருக்குள் புகுந்துவிடும்.
திடீரென தென்னைமர உயரத்திற்கு வெள்ளமட்டம் உயரும். வயோதிபர்கள் சிறுவர்கள் பெண்கள் அதற்குதாக்குப்பிடிக்கமுடியாமல் ஆயரக்கணக்கில் நீரில் மூழ்கி மரணித்தனர்.
சிலர் மரங்களிலும் உயர்ந்த கட்டடங்களிலும் ஏறித்தப்பிய வரலாறும் உண்டு.
பெரிய பெரிய மரங்களையும் வாகனங்களையும் அப்படியே சுருட்டி புரட்டிப்போட்டது. ஆலயங்களும் பள்ளிகளும் ஏன் ரயில்களும் அதற்கு விதிவிக்கல்ல. காலியில் ஒரு ஓடும் ரயிலையே புரட்டி எடுத்தது.
இலங்கையைப்பொறுத்தவரை 38195 பேரின் உயிரை இந்த ஆழிப்பேரலை காவுகொண்டது. 178பாடசாலைகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதில் 68பாடசாலைகள் வடக்குகிழக்கில் இருந்தவை.282பாடசாலைகளில் நலன்புரி நிலையங்கள் இயங்கின. நூற்றுக்கணக்கான சர்வதேச உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் பல்வேறுகோணங்களில் உதவிசெய்தன.
இறுதிவரை உலகதரிசனநிறுவனம் கண்டி மனிதஅபிவிருத்திதாபனம் சோவா ஒக்ஸ்பாம் கோல் யுனிசெவ் தமிழர்புனர்வாழ்வுக்கழகம் சுவாட் யு.எஸ்.எயிட் மெர்லின் யப்பான் உதவிகளைக்கூறலாம். அமெரிக்கஇராணுவமும் வந்து உதவிசெய்தது.
மிகக்கூடுதலாக அம்பாறை மாவட்டத்தில்தான் அதிகசேதம் ஏற்பட்டது. அங்கு சுமார் 9ஆயிரம் பேர் பலியாகினர். சுமார் 58729குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.27537வீடுகள் அழிந்தன. மாவட்டத்தில் கல்முனை சாய்ந்தமருது காரைதீவு ஆகிய பிரதேசங்கள் ஒப்பீட்டளவில் கூடுதலாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும்.261பேர் காணாமல் போயிருந்தார்கள்.4221பேர்காயங்களுக்குள்ளானார்கள்.20602வீடுகள்முற்றாக அழிக்கப்பட்டன.50முகாம்கள் இயங்கின.
மாவட்டத்தில் அதிகமான கல்முனை காரைதீவு பகுதிகளில் மீட்கப்பட்ட சுமார் 6000சடலங்களை மீட்டனர். அவற்றில் 5600 சடலங்களை சம்மாந்துறை மலையடிக்கிராம மயானத்திற்கருகில் பாரிய கவுண்டி உதவியுடன் பாரிய குழிகளை வெட்டி அதற்குள் அவற்றை அடக்கம் செய்தவரலாறு உண்டு. அப்போதைய பிரதியமைச்சர் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் முன்னணியில் நின்று செயற்பட்டார்.
அதற்கு முன்பதாக சம்மாந்துறைப்பள்ளிவாசல்களில் இனமதபேதமற்ற முறையில் சடலங்களை குளிப்பாட்டி அவற்றுக்கு வெள்ளைச்சீலைகளை சுற்றியபின்னரே உழவுஇயந்திரத்தில் ஏற்றி மயானத்திற்குகொண்டுசென்று அடக்கம் செய்தார்கள்.
அந்தகாலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட செவ்விகள் கருத்தக்கள் என்பன இன்றும் நெஞ்சை பிழிகின்றன. அவர்களில் இன்றும் பலர் பித்துப்பிடித்ததுபோல் திரிவதைக்காணக்கூடியதாயுள்ளது. அவர்களில் இருவரின் அனுபவத்தைமாத்திரம் சுரக்கித்தருகிறேன். இவை நான் எழுதிய சுனாமி நூலான 'ஊழியில் ஆழி' என்ற நூலில் தொகுத்துவழங்கியுள்ளேன்.
காரைதீவைச்சேர்ந்த உலகசேகரம் நித்தியானந்தன்(வயது42)தனது 4பிள்ளைகளையும் தந்தையையும் சகோதரியையும் தன் கைப்பிடியிலிருந்து தன்கண்முன்னே பறிகொடுத்தவர்.அவர்; அன்று கூறுகையில் கடல்வருகிறது என்று சொன்னதுதான் தாமதம் மறுகணம் 8அடி உயரமான கறுப்புநிறஅலைஎழுந்துவந்து எம்மைத்தாக்கியது. அந்த இராட்சத அலையில் எனதுகைப்பிடியிலிருந்த 4பிள்ளைகளும் அலைமோதி தத்தளித்தனர். மனைவி பாhரிய காயங்களோடு மீட்டேன். என்றார்.
மனைவி மற்றும் மகளைப்பறிகொடுத்த எஸ்.கோவிந்தசாமி(40) என்பவர் கூறுகையில்:அன்று வீட்டில் நானும் 4பிள்ளைகளும் இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். டும் டும் என்ற பாரிய சத்தம்கேட்டது. மறுகணம் பெரும் அலைகள் வீட்டிற்குள் கணப்பொழுதில் புகுந்தது. சற்றுநேரத்தில் அனைவரும் சுமார் அரைக்கட்டமை தூரம் இழுத்துச்செல்லப்பட்டோம்.நான் ஒரு கம்பிவேலியில் சிக்கினேன்.பின்புவந்துபார்த்தபோது இருவரும் பிணமாக ஆங்காங்கே கிடந்தார்கள். என்றார்.
ராட்சத அலைகளால், கடற்கரையில் நின்றவர்கள் கடலோர கிராமங்களில் வசித்தவர்கள் என பல லட்சக்கணக்காளவர்கள் வாரிச் சுருட்டி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்தில் இந்தோனேசியா இலங்கை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். இலங்கையில் குறிப்பாக கிழக்கில் கரையோர மாவட்டங்களில் 40 ஆயிரம் பேர் மாண்டனர். குவியல் குவியலாக கிடந்த பிணங்கள் ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
அன்று கேட்ட மரண ஓலம் 15 ஆண்டுகளுக்கு பிறகும் கடற்கரையோர கிராமங்களில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அதன் கோரத் தாண்டவத்தை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும். சில நிமிடங்களில் ஆழிப் பேரலை ஏராளமானோர் வாழ்க்கையைப் பறித்தது. அதற்கு முன்னர் வேறு எந்த ஆழிப் பேரலையோ, திடீர் இயற்கைச் சீற்றமோ இத்தனை நாடுகளில் இத்தனை பேரை பலி கொண்டது இல்லை. அதுவும், இலங்கைக்கு இந்த ஆழிப் பேரலைத் தாக்குதல் என்பது புதிது.
இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004 டிசம்பர் 26 அதிகாலை 12.58 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சரிந்தன. நிலநடுக்கத்தை அளக்கும் கருவியான சீஸ்மோகிராப் 8.3 முதல் 10 நிமிடங்கள் வரை நீடித்த நில நடுக்கங்களை இதற்கு முன்னர் எங்குமே பதிவு செய்ததில்லை.
உலகில் 2-ஆவது பெரிய அளவாக ரிக்டர் அளவுமானியில் 9.1 முதல் 9.3 வரை இந்த நிலநடுக்கம் பதிவானது. கடலில் தரைக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1600 கி.மீ. நீள நிலத் தட்டுகள் சரியக் காரணமாக அமைந்தது. இந்த நிலத் தட்டு சரிந்ததால் அந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து அதிவேகமாகக் கடல் நீரைத் தள்ளியது.
இதுவே ஆழிப் பேரலையாக உருவாகி கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக புறப்பட்டு வந்தது.
கடற்கரையோரம் 100 மீட்டர் உயரத்துக்கு எழும்பி உயிர்களையும் உடைமைகளையும் துவம்சம் செய்தது. பூமிப் பந்தை ஒரு செ.மீ.இ அளவுக்கு அசைத்துப் பார்க்கும் வல்லமையுடன் கூடியதாக இந்த நிலநடுக்கம் அமைந்தது என்றால் அது மிகையில்லை.
சுனாமிகள் மாபெரும் அலைகள் கடல் மட்டத்திலும் உயர்வு. அவை உலகில் எங்காவது சராசரியாக வருடத்திற்கு இரண்டு முறை நிகழ்கின்றன - 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவும் அழிவுகரமான சுனாமி இடம்பெறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இது ஒரு முழு கடல் படுகையையும் உள்வாங்கும் தன்மைகொண்டது.
சுனாமிகள் திறந்த கடலில் ஒரு மணி நேரத்திற்கு 500 மைல் வேகத்தில் பயணித்து கரைக்கு வரும்போது பல நூறு அடி உயரத்திற்கு உயரும். அவை கடலோரப் பகுதிகளில் பரவலான பேரழிவை ஏற்படுத்தக்கூடும் -
சுனாமி என்றால் ஜப்பானிய மொழியில் 'துறைமுக அலை' என்று பொருள் . கரையிலிருந்து ஒரு கடலுக்கு அடியில் நிலநடுக்கம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதைப் பொறுத்து சுனாமிகள் கடலோரப் பகுதிகளை நிமிடங்கள் அல்லது மணி நேரத்திற்குள் தாக்கக்கூடும்.
அன்று மாண்ட குழந்தைகள் உயிரோடு இருந்திருந்தால்இன்று இளைஞராக வலம் வந்து கொண்டிருப்பார்கள். அன்று இளைஞராக இறந்து போனவர்கள் இருந்திருந்தால் இன்று திருமணமாகி பிள்ளைகள் பெற்று குடும்பத் தலைவராக வாழ்ந்திருப்பார்கள். அன்று குடும்ப தலைவராக மரித்தவர்கள் இருந்திருந்தால் இன்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்து பேரன்-பேத்திகளை கையில் எடுத்திருப்பார்கள்.
இப்படி எத்தனையோ ஆசைகளுடன் அன்று கரைந்து போனவர்களின் மிச்ச மீதி குடும்பங்களின் இன்றைய நிலை தான் என்ன?. சிதிலமடைந்த இடங்கள் கூட சுனாமி ஏற்படுத்திய சுவடு தெரியாமல் மீண்டும் உயிர்பெற்றுவிட்டன.
ஆனால், உயிர்களை பலிக்கொடுத்த மக்கள் உள்ளங்களில் ரணமாக இருக்கும் காயம் இன்னும் ஆறாமல் அப்படியேத்தான் இருக்கிறது. அதற்கான மருந்து காலத்திடம் தான் உள்ளது. காலம் கடந்து போக... போக... இந்த காயமும் ஆறட்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். இனியும் இதுபோல் இயற்கை பேரிடர் ஒன்றும் ஏற்பட வேண்டாம் என்றும் வேண்டுவோம்.