கல்முனை மாநகர முதல்வர் றகீப் நடவடிக்கை;
சுற்றுச்சூழல் செயலணியின் முயற்சி வெற்றி
சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அங்கு திண்மக்கழிவகற்றல் சேவையினை மேம்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபையினால் சில அவசர வேலைத்திடங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
சாய்ந்தமருதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து புதிதாக உருவாக்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயலணியின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை மாநகர முதலவர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இதன் பிரகாரம் குப்பைகளை அங்கும் இங்கும் வீசி, சுற்றாடல் மாசுபடுத்தப்படுவதை முற்றாக்கத் தவிர்ப்பதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தின் மூன்று முக்கிய இடங்களில் குப்பை சேகரிக்கும் தொட்டிகளை அமைப்பதற்கும் சில வீதிகளில் சிறியரக குப்பைத் தொட்டிகளை வைப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், அவற்றில் சேர்கின்ற குப்பைகள் ஒவ்வொரு நாளும் பெக்கோ இயந்திரத்தின் மூலம் திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் ஏற்றிச்செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.
இத்தொட்டிகள் நிறுவப்பட்ட பின்னர் பொது மக்கள் தமது அன்றாட சமையல் கழிவுகளை மாத்திரம் இத்தொட்டிகளில் போடுவதற்கும் ஏனைய குப்பைகளை தமது வீடுகளிலேயே சேகரித்து வைத்து, தமது வீதிகளில் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் வருகின்றபோது கையளிப்பதற்குமான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்ளும் பணியை தாம் பொறுப்பேற்பதாக சுற்றாடல் பாதுகாப்பு செயலணியினர் இதன்போது உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் தோணாவில் உருவாகின்ற சல்பீனியாக்களை தினசரி உடனுக்குடன் வெளியில் எடுத்து அகற்றுவதற்காக இரு ஊழியர்களை பணிக்கமர்த்துவதற்கு இணக்கம் தெரிவித்த மாநகர முதல்வர், வீதி வடிகான்களை துப்பரவு செய்வதற்காக புதிய பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது வலயத்திற்கென தற்போது மூன்று திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் விரைவில் மேலுமொரு வாகனத்தை வழங்குவதற்கு தாம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் முதலவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சாய்ந்தமருது பிரதேசத்தில் அன்றாடம் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, அங்கிருந்து மொத்தமாக பெரிய கனரக (ட்ரம் ட்ரக்) வாகனங்களில் ஏற்றியனுப்பும் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான தனியான குப்பைமாற்று நிலையமொன்றை அவசரமாக இப்பிரதேசத்தில் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மாநகர முதல்வர், சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை அமைகின்றபோது இந்நிலையத்தையே பயன்படுத்திக் கொண்டு, திண்மக்கழிவகற்றல் சேவையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதற்காக சாய்ந்தமருது கடற்கரையில் இடமொன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அங்கு இந்நிலையத்தை அமைப்பதன் மூலம் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதுடன் சாய்ந்தமருதில் நிலவும் குப்பைப் பிரச்சினைக்கு இதன் ஊடாக முழுமையான தீர்வு கிடைக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்க முடியும் என்றும் முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டார்.
தற்போது கல்முனை மாநகர சபைக்கு பொதுவான ஒரேயொரு குப்பைமாற்று நிலையம் பெரிய நீலாவணையில் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புமின்றி வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும் மாநகர முதல்வர் சுட்டிக்காட்டினார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் குப்பைப் பிரச்சினை தொடர்பில் கரிசனை செலுத்தி இப்படியொரு குழுவினர் முன்வந்து, எம்முடன் கலந்து பேசி, தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட முன்வந்தமைக்காக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட மாநகர முதல்வர், இத்தகைய குழுவினர் முன்வைக்கும் எந்தவொரு சாத்தியமான திட்டத்தையும் அமுல்படுத்துவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் கடந்த காலங்களில் இத்தகைய ஒத்துழைப்பு எதுவும் எமக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இக்குழுவினர் அரசியல் பேதங்களுக்கப்பால் எமக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க முன்வருவீர்களானால் சாய்ந்தமருதில் குப்பைப் பிரச்சினையை வெகுவாக குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமாக இருக்கும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மாநகர முதலவர் ஏ.எம்.றகீப் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் திட்டங்களையும் வரவேற்பதாகத் தெரிவித்த சாய்ந்தமருது சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயலணியினர், எமது அபிப்பிராயங்கள் மற்றும் முன்மொழிவுகளை உள்ளடக்கியதான அனைத்து வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கல்முனை மாநகர சபையுடன் கைகோர்த்து, பக்கபலமாக செயற்படுவதற்கு நாம் தயாராகவிருக்கின்றோம் என்று உறுதியாகத் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் கல்முனைப் பிராந்திய தொற்றாநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருத்துப் பிரதேசத்திற்கான சுகாதாரப்பிரிவு மேற்பார்வையாளர் யூ.கே.காலித்தீன், சாய்ந்தமருது சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயலணியின் ஏற்பாட்டாளர் ஆர்.எம்.ஹனீஸ் உட்பட செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.