கடவுளின் கணக்கு
தியத்தலாவ எச்.எப் ரிஸ்னா
நம்பிக் கெட்டவர் உலகில் உண்டு
கண்முன்னே ஏராளம்
விம்முகின்ற மனம் உடைந்து போனதே
காயங்கள் தாராளம்!
புத்தி மங்கி சுற்றித் திரிந்தது
அறியாமையில் ஒரு காலம்
ஈரமில்லா இதயம் புரிந்தது
அறுந்ததே உறவுப் பாலம்!
அக்கினிக் குழம்பாய் நெஞ்சம் பதறுது
நான் செய்தேனா பாவம்
சிக்கலில் மனது சிக்கித் தவிக்குது
என் மீதே கடும் கோபம்!
தேகத்தின் வலு குறைந்து போனதோ
காலத்தின் கோலம்
சோகம் வந்து தொண்டையை அடைக்குது
அழிந்ததே என் காலம்!
ஏமாந்த பற்பலர் இருக்கும் வரையில்
ஏமாற்றுவாரே யாரும்
துரோகி இருந்தால தோற்றுப் போகும்
வீரம் பொதிந்த போரும்!
வலியில் வெந்து கண்ணீர் எல்லாம்
பெருமூச்சாக மாறும்
கடவுளின் கணக்கோ பாவத்தின் பலனைத்
துல்லியமாக கூறும்!!!