கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியிலுள்ள இளைஞர்களுடனான சந்திப்பொன்று திங்கட்கிழமை இரவு (9) இடம்பெற்றது.
கல்குடா தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதில் பாடசாலை கல்வியை முடித்து விட்டு தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
கல்குடா தொகுதியில் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்கள் சிறந்த முறையில் தங்களுடைய வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து இளைஞர்களும் இணைந்து செயற்பட முடியும் என்று கல்குடா தொகுதிக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் ஏ.அக்பர் தெரிவித்தார்.
இளைஞர்களாகிய நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை விடயங்களையும் முடிந்த வகையில் குறித்த இளைஞர் அமைப்பு உங்களுக்கு நிச்சயமாக செய்யும் என்று நான் உறுதியாக தெரிவிக்கின்றேன் என்று முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் இதில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
எங்களை விட இளைஞர்களாகிய உங்களிடம்தான் நிறைய திட்டங்களும் கூடுதல் எண்ணங்களும் உள்ளது அதனை நீங்கள் வெளிப்படுத்தி இந்த சமூகத்தின் எழுச்சிக்கு நீங்கள் பங்காளிகளாக மாற வேண்டும் என்று செம்மண்ணோடை, மாவடிச்சேனை வட்டார அமைப்பாளர் எச்.எம்.ஹகீம் ஆசிரியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட்டாரக் குழு தலைவர்கள், பிரதேச பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.