ஆளுநர் பதவியை ஜனாதிபதி என்னை பிரத்தியேகமாக அழைத்து வழங்கி, தூர நோக்குடைய தலைவருடைய தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்றமை மாபெரும் பாக்கியமாக கருதுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவிப்பு.
ஆளுநர் பதவியை ஜனாதிபதி என்னை பிரத்தியேகமாக அழைத்து வழங்கி, தூர நோக்குடைய தலைவருடைய தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்றமை மாபெரும் பாக்கியமாக கருதுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் இன்று(12) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக கடமையேற்ற பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும்,
என்னால் தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனதற்கு வருந்துவதாகவும், குறுகிய காலத்தில் தமிழ் மொழியை கற்று உரையாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் அழகிய ஒரு மாகாணமாகும். அது மாத்திரமல்ல ஏராளமான இயற்கை வளங்கள் மனித வளங்கள் கொண்ட ஒரு மாகாணமாக காணப்படுகின்றது.
எனவே, இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி நாட்டை போசிக்கக்கூடிய தன்மை காணப்படுகிறது. இது எமக்கே உரித்தானது.
பௌத்த கலாசார மரபுரிமைகள் கொண்ட நாடாக இந்நாடு காணப்பட்ட போதும் ஏனைய இன மக்கள் கலாசாரங்களை பின்பற்றி முறையில் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் நாட்டு நலன் கருதி இளைஞர்கள் பாதைகளை, பொது இடங்களை அழகுபடுத்துகின்ற முயற்சிகளை சுயமாக மேற்கொண்டு வருவதாகவும் இம்முயற்சி நாட்டுக்கு முன் மாதிரியாக அமைகின்றது.
அதேபோல இளைஞர்கள் கைவிடப்பட்ட காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த முயற்சியை அரச அதிகாரிகள், ஏனையவர்கள் முன்மாதிரியாகக் கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க கூடியவர்களாக மாறவேண்டும்.
கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட சௌபாக்கிய இலக்கில் வறுமையை ஒழித்தல் முதன்மையான நோக்கமாக காணப்படுவதால் வறுமையை ஒழிக்க நிவாரணம் அல்லது மானியங்கள் வழங்கல் ஆகியவற்றால் மாத்திரம் முடியாது, இவற்றை ஒழிக்க பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் சுய தொழில் அடிப்படையிலான வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்க முன் மொழிவதாக, மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண ஆளுநரின் தாயார், அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.