அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும் - அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு


க.கிஷாந்தன்-
ரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

அட்டனில் 11.12.2019 அன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாக இருந்தது.

ஆனால் அந்த கோரிக்கையை இதுவரைக்கும் தெற்கின் பெரும்பாலான சிங்கள சமூகம் அதை ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையிலேயே தற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

மேலும், அவர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை ஞானசார தேரருக்கு வந்தது வரவேற்கதக்க விடயமாகும். இந்த சிந்தனை அனைத்து தெற்கு சமூகத்தினரிடமும் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இது ஒட்டு மொத்த தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினையாகும். இந்த அரசியல் சார்ந்த பிரச்சனையை அரசியல் ரீதியாகவே நோக்க வேண்டும் .இதனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கண்கொண்டு பார்க்க கூடாது என்பது தான் எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.

இப்போது ஓரளவுக்கு ஞானசார தேரர் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் அதனை ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை பொருத்தவரையில் நாங்கள் கூறுவது ஆணைக்குழுகள் நியமிப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். கடந்த காலங்களில் எத்தனையோ ஆணைக்குழுகள் அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் எந்த அரசாங்கத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம்.

அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்ய வேண்டும்.

ஆணைக்குழுக்களை அமைப்பது காலத்தை இழுத்தடிக்கின்ற செயல். இந்த பயங்கரவாத தடை சட்டத்தை வைத்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வது ஒரு சாத்தியமற்ற செயல்.

எனவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகள் அணைவரையும், அரசியல் தீர்மானத்திற்கு ஊடாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஞானசார தேரர் மற்றும் அவரை சார்ந்த அமைப்பினர் அதுபோன்று தெற்கின் சிங்கள சமூகம் முன்வைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருக்கின்றது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -