முஸ்லிம்களின் அரசியல்கூட துய்மை அற்ற விதத்திலேயேதான் மேற்கொள்ளப்படுகிறது - ஹசன் அலி கவலை

தூய்மை அற்ற விதத்தில் முஸ்லிம்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, கல்வி, கலாசாரம், அரசியல் எல்லாவற்றிலுமே இன்று தூய்மை கிடையாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
நிந்தவூரில் இயங்கி வருகின்ற அல் பலாஹ் பாலர் பாடசாலையின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் கடந்த புதன்கிழமை மாலை நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலையின் எம். எச். எம். அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றன. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
இங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர்த்தியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன. குறிப்பாக அவை இஸ்லாமிய கலாசாரங்களை பிரதிபலிக்கின்றன. மழலைகளின் நிகழ்ச்சிகள் என்பதால் மகிழ்ச்சி தருகின்றன. ஆபாசம் அற்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது மன நிறைவை தருகின்றது. இன்று நாடு எதிர்கொண்டு இருக்கின்ற முக்கிய பிரச்சினைகளில் ஒன்று கலாசார சீரழிவு. கலாசார சீரழிவில் இருந்து சமூகத்தை காப்பாற்ற வேண்டி இருக்கின்றது. எல்லா விடயங்களிலுமே தூய்மை என்பது இன்று இல்லாமல் சென்று கொண்டிருக்கின்ற கால கட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
கல்வி, கலாசாரம், அரசியல் என்பவற்றில்கூட தூய்மை கிடையாது. எனவே நாம் தூய்மையானவர்களாக எமது எதிர்கால சந்ததியினரை வளர்த்தெடுக்க வேண்டி உள்ளது. பெற்றோர் இதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டி உள்ளது. பிள்ளைகளை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பிள்ளைகள் சார்ந்த அனைத்து செயற்பாடுகளிலும் கூடுதல் அக்கறையை செலுத்துதல் அவசியம்.
இன்று இந்நாட்டில் பாரிய அதிரடி மாற்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஊழல் அற்ற தூய்மையான சமுதாயத்தை உருவாக்கி தருவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. சமூகத்தை நெருக்குகின்ற ஊழல்களை இல்லாமல் செய்வதில் இந்த அரசாங்கம் பற்றுறுதியுடன் செயற்படுகின்றது. கல்வி துறையில் கூட பல பல சீர்திருத்தங்கள் அரசாங்கத்தால் கொண்டு வரப்படுகின்றன.
கல்வி துறையை ஊடறுத்து நிற்கின்ற ஊழல்களை இதன் மூலம் இல்லாமல் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை கண் முன் தெரிகின்றது. ஆசிரியர்களின் ஒழுக்கம், நடத்தை, பழக்க வழக்கம் போன்றவை சம்பந்தமாகவும், தனியார் கல்வி நிலையங்களை நெறிப்படுத்துவது தொடர்பாகவும்கூட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன். ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் பட்டதாரியாக விளங்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகின்றது.
பட்டாதாரி அல்லாத ஆசிரியர்கள் விசேட செயல் திட்டம் மூலமாக பட்ட படிப்புகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் சேர்க்கப்படுவார்கள். இப்போது மாவட்ட ரீதியான ஸட் புள்ளி முறைமை மூலமாகவே க. பொ. த உயர் தர மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றனர். ஆனால் பாடசாலை ரீதியிலான ஸட் புள்ளி முறைமை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.
இதன் மூலம் பின் தங்கிய, வளங்கள் குறைந்த, அதிகஷ்ட பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்க வழி ஏற்படுகின்றது மேலும் கட்டுப்பாடற்ற விதங்களில் நடத்தப்படுகின்ற தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.
இவற்றை போலவேதான் முன்பள்ளிகள் தொடர்பாகவும் அரசாங்கத்தால் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. அரசாங்கத்தின் வேலை திட்டங்களுக்குள் முன்பள்ளிகள் பூரணமாக உள்வாங்கப்படுவதற்கான நல்ல சகுனங்கள் தெரிகின்றன. இதன் மூலமாக முன்பள்ளிகள் எதிர் கொண்டு வருகின்ற குறைபாடுகள் நீக்கி கொடுக்கப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியையும் இத்தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -