சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இம்முறை ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 07 மாணவிகளும் அனைத்து பாடங்களிலும் திறமையாக சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய இம்மாணவியர்கள் நான்காவது தொகுதியினராவர். முன்னைய மூன்று தொகுதி மாணவிகளும் இவ்வாறு சித்தியடைந்து, பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகியிருந்தனர்.
இக்கல்லூரியில் அல்ஆலிம் கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தின் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியா பட்டத்துடன் வெளியேறுகின்றனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் மகளிர் ஆன்மீகக் கல்விக்கான கலங்கரை விளக்காகத் திகழ்கின்ற இக்கல்லூரியானது சிறந்த பெண் பட்டதாரிகளையும் மௌலவியாக்களையும் உருவாக்கி வருகின்றது. இதுவரை இக்கல்லூரியில் இருந்து பத்துக்கு மேற்பட்ட மாணவிகள் அல்-ஆலிம் மௌலவியாப் பட்டத்தை பெற்றுள்ளதுடன் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கல்லூரியை ஸ்தாபித்து, கடந்த பல வருடங்களாக சிறந்த தலைமைத்துவம் வழங்கி, நிர்வகித்து வருகின்ற அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்களுக்கும் முகாமைத்துவ சபையினருக்கும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருதில் தனியார் கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த இக்கல்லூரி, தற்போது சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத் தொகுதியில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.