கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கணேஷ், உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் ஆகிய இருவரும் மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்கிரமரத்ன வெளியிட்டுள்ளார். இவர்கள் கட்சி உறுப்புரிமையை இழந்திருப்பதனால் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இவர்களது நீக்கம் பற்றி கல்முனை மாநகர மேயர் மற்றும் ஆணையாளருக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, மேற்படி வர்த்தமானி அறிவித்தல் இணைக்கப்பட்ட கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 2018 பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இவர்கள் இருவரும் அக்கட்சியினால் மேலதிக பட்டியல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுள் காத்தமுத்து கணேஷ், சபையினால் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டு, பதவி வகித்து வந்தார். தற்போது இவர் மாநகர சபை உறுப்புரிமையை இழந்திருப்பதனால் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பதவியும் வெற்றிடமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.