சமூக சிற்பிகள் நிறுவனத்தின் சோனக தெரு பிரதேச இளையோர் குழுவின் ஏற்பாட்டில் மாணவர்கள் மத்தியில் குறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை மீண்டும் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தையும், நன்மைகளையும் உணர்த்தி வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு இன்று 2019.12.08 யாழ்ப்பாணம் ஜே 86 மற்றும் ஜே 87 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள மாணவர்கள் மற்றும் சிறார்களை ஒன்று திரட்டி யாழ் வண் மேற்கு மன்பஉல் உலூம் பாடசாலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சமூக சிற்பிகள் நிறுவனத்தின் பிரதிநிதியாக திரு. ரவீந்திரன் (கள உத்தியோகத்தர்) கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். அத்துடன் யாழ் பொது நூலக பிரதிநிதி நூலகர் ஒருவரும் வருகை தந்து பொது நூலக செயற்பாடுகள் - மாணவர்கள் மற்றும் சிறார்களுக்கு நூலகத்திலுள்ள கல்வி மற்றும் இணைப்பாடவிதானங்கள் தொடர்பில் உள்ள வாய்ப்புக்கள் குறித்து விளக்கினார்.
மேலும் இந் நிகழ்வில் மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம மௌலவி ஜாபிர் , சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.எல்.லாபிர், சமூக ஆர்வலர்கள், சமூக சிற்பிகள் நிறுவனத்தின் இளையோர் குழு உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறார்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வின் இறுதியில் மாநகர பொது நூலகத்தின் நடமாடும் நூலக வாகனம் கொண்டுவரப்பட்டு மாணவர்களை குறித்த வாகனத்தில் ஏற்றி தங்களுக்கு விருப்பமான நூல்களை வாசிப்பதற்குமான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக வாசிப்பில் ஈடுபட்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.
தகவல்
என்.எம். அப்துல்லாஹ் - 077 3454190
இளம் சமூக சிற்பி
சமூக சிற்பிகள் நிறுவனம்.