கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் ஏற்கனவே வர்த்தக நிலையங்கள், கடைகள் வைத்திருந்து, தற்போது அவை மூடப்பட்டிருந்தால் அல்லது வேறு நபர்களுக்கு விற்கப்பட்டிருந்தால் அல்லது வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அது குறித்து உடனடியாக கிராம சேவகர் ஊடாக மாநகர சபைக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையேல் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளவில்லை எனும் காரணத்தின் பேரில் அவற்றின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
இதற்காக எதிர்வரும் 2020 ஜனவரி 05ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநகர சபையின் நிதிப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இதுவரை மாநகர சபையில் பதிவு செய்யப்படாத வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் உடனடியாக மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டு, வியாபார அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறித்த இடங்களில் அந்த அனுமதிப் பத்திரம் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
இதுவரை வர்த்தக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளாத வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீதும் வியாபார அனுமதிப் பத்திரத்தை பெற்றும் அதனைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை வியாபார அனுமதிப் பத்திரம் காட்சிப்படுத்தப்படாத வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதை பொதுமக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கொள்வனவு தொடர்பிலான பிரச்சினைகளுக்கு மாநகர சபை பொறுப்பாகாது என்றும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், வியாபார அனுமதிப் பத்திரம் காட்சிப்படுத்தப்படாத வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் தொடர்பில் 0761405460 அல்லது 0760103680 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.