அன்பின் வழி நின்று அறிவு தந்த விடத்தல்தீவு எம்.சி.எம்.இமாம் ஆசிரியர்.


விடத்தல்தீவு இமாம் றிஜா-
லைத் தவழ்ந்து மோதி விழும் அழகு பொழில் மன்னார் மாதளத்தின் எழிலும் வனப்புமிக்க திரிநிலபுரியாம் விடத்தல்தீவு எனும் அழகிய கிராமத்தில் பேரும் புகழும் மிக்க தமிழ் முழக்கம் புலவர் முஹம்மது காஸிம் ஆலிம் -சுஹரா உம்மா தம்பதிகளின் புதல்வராக முஹம்மது இமாம் அவர்கள் 1940ம் ஆண்டு பிறந்தார்கள். இளமைக் காலத்திலேயே சமூக ஆர்வலராக, நல்ஆசிரியராக இலக்கிய ஆர்வலராக இருந்து மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாட்டிலும் சமூகக் கலாச்சார விடயங்களிலும் நற்பணிகளிலும் தன்னை அர்ப்பணித்தார்.
1960 களில் தமிழ் விஷேட நெறி ஆசிரியராக நியமனம் பெற்று அர்ப்பணிப்பும் தியாகமும் மிகுந்த பணியை செவ்வனே செய்ததுடன் சில பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபராக பொறுப்பேற்றுக் கல்விப் பணியைப் புரிந்து மாணவர்களின் உயர்விற்கு வழிவகுத்து நற்பிரஜைகளை உருவாக்க வழி சமைத்தார். சிறுபான்மை அரசியல் கட்சி ஒன்றின் மாந்தை பிராந்திய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டு கிராம அபிவிருத்தி மற்றும் சமூக நல விடயங்களிலும் முன்னின்று செயற்பட்டதோடு பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவராக இருந்தது சமய கலாசார விடயங்களின் சமூகம் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்பதோடு சமூக உயர்ச்சிக்கு ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி செயலாற்றினார். மேலும் இடம்பெயர்ந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடம்பெயர்ந்தோர்க்கான நலன்புரி அமைப்பைப் புத்தளத்தில் உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று மக்களின் வாழ்வாதாரம் அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வேலைத் திட்டங்களையும் உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று சமூக உயர்ச்சிக்காய் தன்னை அர்ப்பணித்ததுடன் நன்னெறி கல்வி மறுமலர்ச்சி சமூக ஒன்றியத்தின் பணிப்பாளராகவும் இருந்து அவ்வமைப்பு திறம்பட இயங்குவும் அதன் செயற்பாடுகள் சமூக மயமாக்கப்படுத்தவும் வழிகாட்டியாகவும் செயற்பட்டார்.
தமிழ் மொழியைப் போலவே ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பாண்டித்தியம் பெற்றதோடு இம்மொழிகளை தனது கற்பித்தல் பணிகளில் மாணவர்களுக்கு போதித்ததுடன் 1988ம் ஆண்டு சத்திய பிரமாணம் பெற்ற அரசகரும மொழி பெயர்ப்பாளராகவும் நியமனம் பெற்றார்.

தட்டச்சு செய்வதில் தேர்ச்சி பெற்ற இவர்கள் கதைத்துக் கொண்டே விபரங்களைக் கேட்டுக் கொண்டே நேர்த்தியாக தட்டச்சு செய்வதில் வல்லவராகக் காணப்பட்டதுடன் 1992ம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதிவானாக நீதி அமைச்சினால் நியமனம் பெற்று சமூக உயர்ச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தார். வாசிப்பதில் இவருக்கு அகோரப்பசி இதனால் வீட்டிலும் ஓர் வாசிகசாலையை (ஹன்பல் நூலகம்) உருவாக்கித் தேவையானோர்க்கு உதவி புரிந்தது மட்டுமல்லாமல் தினமும் இவரின் மேசையில் ஓர் ஆங்கில நாளிதழும் இரு தமிழ் நாளிதழ்களும் கிடக்கும். மேலும் பத்திரிகைகளில் வரும் சமூக கலாச்சார அரசியல் விடயங்களைப் பிள்ளைகளுக்குத் தெளிவு படுத்துவதிலும் அறிவூட்டுவதிலும் விடாப்பிடியாக இருந்தது மட்டுமன்றி தம் பிள்ளைகளை அரச தொழிலுக்கு அப்பால் கலைஞர்களாக கவிஞர்களாக இலக்கிய வாதிகளாக மிளிர வேண்டும் என்று ஆசைக் கொண்டு 3 பிள்ளைகளை ஊடகவியலாளர்களாகவும் பணிபுரிய வைத்தார். தேடிவந்த விருதுகளைத் தவிர்த்தது மட்டுமன்றி இறைவன் தந்த அருளையும் ஆற்றலையும் சமூகத்திற்காகப் பயன்படுத்தியது அல்லாமல் பேரும் புகழும் தேவையில்லை என்ற கோட்பாட்டோடு தமது வாழ்நாளைக் கழித்தார்.
35 வருடகால ஆசிரிய பணியில் மாணவர்களைக் கண்டிக்க பிரம்பு தூக்காத நல் ஆசானாக இருந்து அன்பால் வழிப்படுத்தினார். மேலும் ஆசிரியர் தொழில் புரியும் தமது பிள்ளைகளுக்கு ஆசிரியப் பணி ஓர் அறப்பணி மாணாக்கரை வழிப்படுத்தும் சீரிய பணி புனித பணி இது இறைபணி இது என்பதை அடிக்கடி ஞாபகம் ஊட்டி இப்பணியின் புனிதத்தை விளங்க வைத்து வளப்படுத்துனார். துடிப்பும் துணிவும் தோழமைப் பண்பும் தலைமைத்துவ ஆற்றலும் தூரநோக்கான பார்வையும் சிந்தனையும் பிரச்சினைகளை சாதூரியமாகத் தீர்க்கும் திறனும் வேரின் பொருளைப் போல் (இமாம்- தலைவர்) பெற்றதோடு மொழியாற்றும் குரல் வளமும் இவரின் செயற்திறனிற்கு வழிசமைத்தன எனலாம். நூர்ஜஹான் என்போரை அன்பு மனைவியாக கரம் பெற்று 6 செல்வங்களுக்கு தந்தையாகி தமது இறுதி மூச்சுவரை பிள்ளைகளின் உயர்ச்சியிலும் செயற்பாடுகளிலும் வழிகாட்டியாக ஆலோசகராக இருந்து ஒலியூட்டியது மட்டுமன்றி தாம் அறிந்த நல்ல விடயங்களை தமது பிள்ளைகளுக்கும் அறிந்து செயலாற்ற வேண்டும் என பெரிதும் விரும்பினார். 2016ம் ஆண்டு மார்கழி திங்கள் 28ம் நாள் தனது 76ம் வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து எம் அன்புத் தந்தை உயிரை அல்லாஹ் ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்குவானாக!
அன்னாரின் பெயரும் புகழும் குன்றின் மேலிட்ட தீபமாய் என்றும் பிரகாசிக்கட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -